/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கண்டிகை தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சீரமைப்பதால் நிதி வீண்
/
கண்டிகை தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சீரமைப்பதால் நிதி வீண்
கண்டிகை தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சீரமைப்பதால் நிதி வீண்
கண்டிகை தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சீரமைப்பதால் நிதி வீண்
ADDED : மார் 18, 2025 12:34 AM

நந்திவரம்; நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, தாலுகா அலுவலகம் அருகே, சர்வே எண் 252/1ல், 11.24 ஏக்கர் பரப்பில், கண்டிகை தாங்கல் ஏரி உள்ளது. கிருஷ்ணாபுரம், ராணி அண்ணா நகர், மலைமேடு பகுதியிலிருந்து வரும் மழைநீர், இதில் தேங்கும்.
இதனால், சுற்றுப்பகுதி மக்களுக்கும், ஏரியை ஒட்டி அமைந்துள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான விவசாய நிலத்தின் சாகுபடிக்கும், உரிய நீராதாரமாக இந்த ஏரி இருந்தது.
இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் நடந்த நகரமயமாக்கலில், ஏரியின் மேற்கு, தெற்கு பகுதிகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டன. இதில், ஏரியின் மொத்த பரப்பில், 40 சதவீதம் கட்டடங்களாக மாறிவிட்டன.
தவிர, ஆக்கிரமிப்பாளர்களின் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் கலப்பதால், அதன் இயல்பு தன்மை மாறி, அழிவின் விளிம்பிற்கு சென்றது.
மாவட்ட நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, கடந்த 2024, செப்., மாதம், 1.36 கோடி ரூபாய் செலவில் ஏரியை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, தேங்கும் மழைநீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகம் துவங்கியது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சீரமைப்பு பணிகள் நடக்கின்றன.
இதனால், நான்கு ஏக்கர் பரப்புள்ள ஏரி நிலம் தனியார் வசமாகி, மாயமாகிவிடும்.
நீர்நிலை பகுதியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, உச்ச நீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இயற்கை வளங்கள் அனைவருக்கும் பொதுவானவை. அடுத்த தலைமுறையினருக்கு நாம் வழங்கிடும் கொடை, இயற்கை வளங்கள் மட்டுமே.
எனவே, நகராட்சி நிர்வாகம், எவ்வித பாரபட்சமுமின்றி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் பின் ஏரியை சீரமைக்க வேண்டும்.
பகுதிவாசிகள் கூறியதாவது:
பல்லாண்டுகளாக சேமித்த தொகை மற்றும் கடன் வாங்கி, இங்கே வீடு கட்டி வசித்து வருகிறோம். இது ஏரிக்கு உட்பட்ட இடமா என்பது எங்களுக்கு தெரியாது. வீட்டிற்கு மின் இணைப்பு, ரேஷன் அட்டை உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களும் பெற்றுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
தற்போது, ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியை மட்டும் கணக்கில் எடுத்து, 1.36 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மழைக்காலத்தில் பணிகள் துவக்கப்பட்டதால், சற்று பின்னடைவு ஏற்பட்டது.
சிமென்ட் கல் நடைபாதை, 7 அடி அகலத்தில், 300 மீ., நீளத்தில் அமைக்கப்படுகிறது. தவிர, ஓய்வெடுக்கும் இருக்கைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் இடம் பெறுகின்றன. அனைத்து பணிகளும், தற்போது வேகமெடுத்துள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.