/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளில் மூழ்கிய நெடுஞ்சாலைகள் புறநகரில் தொடரும் பலி, வழிப்பறி காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு
/
இருளில் மூழ்கிய நெடுஞ்சாலைகள் புறநகரில் தொடரும் பலி, வழிப்பறி காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு
இருளில் மூழ்கிய நெடுஞ்சாலைகள் புறநகரில் தொடரும் பலி, வழிப்பறி காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு
இருளில் மூழ்கிய நெடுஞ்சாலைகள் புறநகரில் தொடரும் பலி, வழிப்பறி காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 24, 2024 06:28 AM

மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, செங்கல்பட்டு- - காஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
இந்த சாலைகள் வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டிற்கு பல்வேறு தேவைகளுக்கு செல்லும் மக்கள், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலைகளின் பல்வேறு இடங்களில் விளக்குகள் இல்லாமலும், அமைக்கப்பட்ட விளக்குகள் போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்து உள்ளது.
இதன் காரணமாக, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதாக, வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மின் கம்பங்களில், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்ட தெரு விளக்குகள் எரிந்தும் பயனில்லை என, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டை சுற்றியுள்ள பழைய ஜி.எஸ்.டி., ரயில்வே மேம்பாலங்கள் சாலை, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், பொத்தேரி, வண்டலுார், கூடுவாஞ்சேரி -- மாடம்பாக்கம் ரயில்வே மேம்பாலம், செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் சாலை போன்ற பல்வேறு இடங்களில் விளக்குகள் ஒளிர்வதில்லை.
இதன் காரணமாக, அப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மேலும், இருள் சூழ்ந்த பகுதிகளின் வழியாக செல்வோரை மடக்கி மொபைல் போன் பறிப்பு, வழிப்பறி சம்பவங்களும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சமீபத்தில், பெரும்பாக்கம் அவுசிங்போர்டு பகுதியில் ஆய்வு செய்த செங்கல்பட்டு கலெக்டர், 'தெரு விளக்குகளை முறையாக பராமரித்து இருளை நீக்கினால், குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும் எனக் கூறினார்.
ஆனால், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பழைய ஜி.எஸ்.டி., சாலை மற்றும் இருங்குன்றம்பள்ளி மேம்பாலம் இருளில் மூழ்கி உள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் பணி முடிந்து செல்லும் அரசு ஊழியர்களே, ஒருவித அச்சதுடனேயே சென்று வருகின்றனர். இதே நிலை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விளக்குகள் பழுதடைந்தது குறித்து, முதல்வரின் தனிப் பிரிவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தோம். இதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், 'விரைவில் பழுது நீக்கம் செய்யப்படும்' என, தெரிவித்தனர். ஆறு மாதங்களை கடந்தும், தற்போது வரை விளக்குகள் சரிசெய்யப்படவில்லை.
- எஸ்.பாண்டியராஜ், செங்கல்பட்டு.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் எரிவதில்லை என, புகார்கள் வந்துள்ளன. இதை தொடர்ந்து, விளக்குகளை சரிசெய்யும் பணிகளுக்கு, இம்மாத இறுதியில் 'டெண்டர்' விடப்பட உள்ளது. அதன்பின் பணிகள் துவக்கப்படும்.
- நெ.சா., துறை அதிகாரி, செங்கல்பட்டு.