/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாழம்பூர் அருகே திருட்டு அதிகரிப்பு போலீஸ் ரோந்து வர வேண்டுகோள்
/
தாழம்பூர் அருகே திருட்டு அதிகரிப்பு போலீஸ் ரோந்து வர வேண்டுகோள்
தாழம்பூர் அருகே திருட்டு அதிகரிப்பு போலீஸ் ரோந்து வர வேண்டுகோள்
தாழம்பூர் அருகே திருட்டு அதிகரிப்பு போலீஸ் ரோந்து வர வேண்டுகோள்
ADDED : அக் 06, 2025 01:37 AM

திருப்போரூர்:தாழம்பூர், சச்சிதானந்தாபுரம் பகுதியில் அடிக்கடி பைக் மற்றும் கார்களில் இருந்து பேட்டரி, பெட்ரோல் திருடப்பட்டு வருவதால், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், தாழம்பூர் ஊராட்சியில் அடங்கிய சச்சிதானந்தாபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த ஆறு மாதங்களாக, இந்த வீடுகளை குறிவைத்து, இரவு நேரங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இரவில் திரியும் மர்ம நபர்கள், வீடுகளின் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக், கார்களில் இருந்து பேட்டரி, பெட்ரோல் உள்ளிட்டவற்றை நிதானமாக திருடுவதுடன், கண்காணிப்பு கேமராக்களின் பேட்டரிகளையும் திருடிச் செல்கின்றனர்.
இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு ஆதாரங்களை, தாழம்பூர் காவல் நிலையத்தில், அப்பகுதி மக்கள் மூன்று நாட்களுக்கு முன் கொடுத்து, புகாரும் அளித்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவும் மர்ம கும்பல்கள், குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்து பைக்குகளில் இருந்து பெட்ரோலை திருடிச் சென்றுள்ளனர்.
இப்பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், போலீசார் முறையாக ரோந்து வருவதில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
எனவே, திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க, சச்சிதானந்தாபுரம் பகுதியில், போலீசார் தினமும் ரோந்து செல்ல வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.