ADDED : ஆக 16, 2025 12:15 AM

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நாட்டின் 79ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நாட்டின் 79ம் ஆண்டு சுதந்திர தின விழா, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. எஸ்.பி., விவேகானந்த சுக்லா முன்னிலையில், கலெக்டர் பிரதாப், தேசிய கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
தொடர்ந்து, சுதந்திர மற்றும் மொழி போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பின், பல்வேறு துறையில் சிறப்பாக பணிபுரிந்த 799 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், 21 பயனாளிகளுக்கு 75.23 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. பள்ளி கல்வி துறை சார்பில், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
* பொன்னேரி சப் - கலெக்டர் ரவிக்குமார், வட்டாட்சியர் சோமசுந்தரம், பொன்னேரி நகராட்சி தலைவர் பரிமளம், காவல் ஆய்வாளர்கள் குணசேகரன், காளிராஜ் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர்.
* கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
* திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், காலை 9:30 மணிக்கு தேசிய கொடியை பி.டி.ஓ., மாணிக்கம் ஏற்றினார். இதில், அரசு ஊழியர்கள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ராஜேஷ், தேசிய கொடியை ஏற்றினார்.
* திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., கனிமொழி தேசிய கொடி ஏற்றினார்.
திருத்தணி தளபதி மேல்நிலைப் பள்ளி மற்றும் மகளிர் கல்லுாரியில், தாளாளர் எஸ்.பாலாஜி தேசிய கொடியேற்றி வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உட்பட அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
* காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக நடந்தது. கலெக்டர் கலைச்செல்வி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில், காவலர்கள் அணி வகுப்பை பார்வையிட்டார்.
தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் அறிஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய, 432 அரசு ஊழியர்களுக்கு கேடயங்கள், சான்றிதழ்களை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, 43.13 லட்சம் ரூபாய் மதிப்பில், 38 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பின், பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
அதேபோல், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில், மேயர் மகாலட்சுமி தேசிய கொடியேற்றினார். இதில், தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன், மாநகராட்சி கமிஷனர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* செங்கல்பட்டு
செங்கல்பட்டு, மலையடி வேண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், சுதந்திர தின விழாவையொட்டி, நேற்று காலை 9:05 மணிக்கு, கலெக்டர் சினேகா தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், 73 பயனாளிகளுக்கு 75.74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சப் - கலெக்டர் மாலதிஹெலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், இந்தியா - பாகிஸ்தான் போர் நினைவுச்சின்னம் பூங்காவில், செங்கல்பட்டு முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில், சுதந்திர தின விழா நடந்தது. ஓய்வுபெற்ற ராணுவ கர்னல் அலெக்ஸ் சந்திரன் பங்கேற்று, தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி துணைத்தலைவர் அன்பழகன் தலைமையில், சுதந்திர தின விழா நடந்தது.
திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கேளம்பாக்கம், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
ஆறுபடை வீடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது.
அதேபோல், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி விழா கொண்டாடப்பட்டது.
- நமது நிருபர் குழு -