/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் கரும்பு நடவு விவசாயிகளுக்கு அழைப்பு
/
செங்கையில் கரும்பு நடவு விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 27, 2025 07:51 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் கரும்பு நடவு செய்ய, கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் படாளம் கிராமத்தில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு, 2024-25ம் ஆண்டு, அரைவை பருவத்தில், 938 விவசாயிகளிடமிருந்து 69,360 டன் கரும்பு பெறப்பட்டு அரைவை செய்யப்பட்டது.
இதில், 315 விவசாயிகளுக்கு, 13,154 டன்களுக்கு, 4.14 கோடி ரூபாய் கரும்பு கிரய தொகையை, ஆலை அளவில் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 4.14 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்து, கடந்த 22ம் தேதி உத்தரவிட்டது.
அதன் பின், கரும்பு வழங்கிய நிலுவை விவசாயிகளின் வங்கிக் கணக்கில், கடந்த 26ம் தேதி தொகை வரவு வைக்கப்பட்டது.
மேலும், 2024-25ம் ஆண்டு ஆலை அரைவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக, டன் ஒன்றுக்கு 349 ரூபாய் வீதம், 2.44 கோடி ரூபாய் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.
இந்த தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக விரைவில் வழங்கப்படும். இதனால், 938 விவசாயிகள் பயன் பெறுவர். 2025 - 26ம் ஆண்டு நடவு பருவத்தில் புதிய நடவு செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு, தமிழக அரசின் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், அகலபாருடன் கூடிய பருசீவல் நாற்று நடவிற்கு, ஏக்கருக்கு 7,450 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
அகலபாருடன் கூடிய ஒரு பரு விதைக்கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 3,200 ரூபாய் மானியமாக வழங்கப்படும். அதிக பரப்பில், ஆலைக்கு கரும்பு நடவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.