/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊராட்சியில் நீடிக்கும் கல்பாக்கம், அணுபுரம்...குழப்பம்: சர்ச்சை நீடிப்பதால் விலக்க எதிர்பார்ப்பு
/
ஊராட்சியில் நீடிக்கும் கல்பாக்கம், அணுபுரம்...குழப்பம்: சர்ச்சை நீடிப்பதால் விலக்க எதிர்பார்ப்பு
ஊராட்சியில் நீடிக்கும் கல்பாக்கம், அணுபுரம்...குழப்பம்: சர்ச்சை நீடிப்பதால் விலக்க எதிர்பார்ப்பு
ஊராட்சியில் நீடிக்கும் கல்பாக்கம், அணுபுரம்...குழப்பம்: சர்ச்சை நீடிப்பதால் விலக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 06, 2025 10:32 PM

புதுப்பட்டினம்:அணுசக்தி துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்பாக்கம், அணுபுரம் ஆகிய நகரிய பகுதிகள், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், நெய்குப்பி ஆகிய ஊராட்சி பகுதிகளுடன் இணைந்து உள்ளதால் குழப்பம் நீடிக்கிறது. நகரிய பகுதிகளை அணுசக்தி துறை நிர்வகிக்கும் நிலையில், கல்பாக்கம் மற்றும் அணுபுரத்தை ஊராட்சிகளிலிருந்து விலக்க வேண்டுமென, எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கல்பாக்கத்தில், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி அணுமின் நிறுவனம், பிற அணுசக்தி நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன.
இவற்றில் பணிபுரியும் அறிவியலாளர்கள் உள்ளிட்டோர், அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்பாக்கம், அணுபுரம் ஆகிய நகரிய பகுதிகளில் வசிக்கின்றனர்.
அணுசக்தி தொழில் வளாக பகுதியிலிருந்து தெற்கில் 5 கி.மீ.,யில் கல்பாக்கமும், மேற்கில் 5 கி.மீ.,யில் அணுபுரமும் அமைந்து உள்ளன.
தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் ஊராட்சி நிர்வாகத்திற்கு தொடர்பில்லாத இவ்விரு நகரிய பகுதிகள், ஊராட்சி பகுதியுடன் இணைந்ததாகவே நீண்ட காலமாக உள்ளதால் சிக்கல் நீடிக்கிறது.
கல்பாக்கம் நகரிய பகுதியானது புதுப்பட்டினம் மற்றும் சதுரங்கப்பட்டினம் ஆகிய ஊராட்சிகளுடன் இணைந்துள்ளது. புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகிய ஊராட்சிகளில், தலா 15 வார்டுகள் உள்ளன.
புதுப்பட்டினம் ஊராட்சியில், எட்டு வார்டுகள் மற்றும் சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில், இரண்டு வார்டுகள் என, கல்பாக்கம் நகரியமாக அமைந்துள்ளது.
புதுப்பட்டினத்தில் ஏழு, சதுரங்கப்பட்டினத்தில் 13 ஆகிய வார்டுகளே, ஊராட்சிப் பகுதியாக உள்ளன.
அதேபோன்று, நெய்குப்பி ஊராட்சியில் உள்ள ஒன்பது வார்டுகளில், ஐந்து வார்டுகள் அணுபுரம் நகரிய பகுதியாக உள்ளன.
நான்கு வார்டுகளே, நெய்குப்பி பகுதியாக உள்ளன.
அதேபோன்று, மூன்று ஊராட்சிகளிலும், தலா ஒரு ஒன்றிய கவுன்சிலர் வார்டு மட்டுமே உள்ளது. மாவட்ட கவுன்சிலர் வார்டுகளும், நகரியங்களுடன் ஒருங்கிணைந்து உள்ளன.
நகரியங்கள் இணைந்த அடிப்படையில் தான், ஊராட்சிகளின் மக்கள் தொகை, வாக்காளர்கள் எண்ணிக்கை ஆகியவை கணக்கிடப்படுகின்றன.
உதாரணமாக, புதுப்பட்டினத்தின் மக்கள் தொகை, 25,000க்கும் அதிகம். கல்பாக்கத்தைத் தவிர்த்து மக்கள் தொகை, 10,000க்கும் அதிகம்.
இந்நிலையில், இவ்விரு அணுசக்தி துறை பகுதிகளை இணைத்து ஊராட்சியாக செயல்படுவது, நீண்டகால சர்ச்சையாக நீடிக்கிறது. குறிப்பாக கல்பாக்கம், அணுபுரம் நகரிய பகுதிகளை, அணுசக்தி துறை நிர்வகித்து பராமரிக்கிறது.
ஆனால் இவை, ஊராட்சி நிர்வாக பகுதியில் இடம்பெற்றுள்ளன.
ஊராட்சிகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கு, நகரிய பகுதியினர் ஒருங்கிணைந்த எண்ணிக்கை அடிப்படையில், திட்டங்களுக்கான நிதியை அரசு அளிக்கிறது.
இந்த நிதியை அபகரிக்கும் சுயநல போக்கால், மாநில அரசிற்கு தொடர்பற்ற கல்பாக்கம், அணுபுரம் நகரிய பகுதிகளையும், ஊராட்சியாக நீடிக்க விட்டுள்ளனர்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலில், மூன்று ஊராட்சிகளின் தலைவர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் தேர்வில், நகரிய வாக்காளர்களே வெற்றியை நிர்ணயிக்கின்றனர்.
இப்பதவிகளை வகிப்பவர்கள், அணுசக்தி துறை ஒப்பந்த பணிகள் மற்றும் பிற சலுகைகளை பெறுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, அணுசக்தி துறை ஊழியர் குடும்பத்தினர், நகரிய பகுதி இடம்பெற்ற வார்டு பகுதிகளின் உறுப்பினர் பதவிக்கு, அரசியல் கட்சி வேட்பாளராக சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.
மாநில அரசிற்கு தொடர்பற்ற இப்பகுதியில், வார்டு உறுப்பினர்களுக்கும் அவசியமில்லை.
இதுகுறித்து சர்ச்சை ஏற்பட்ட நிலையில், மாநிலம் முழுதும் உள்ள, மத்திய அரசு துறைகளின் நகரிய பகுதிகளை, ஊராட்சிப் பகுதிகளிலிருந்து விலக்குவது குறித்து, ஊரக வளர்ச்சித் துறையிடம் கருத்து கேட்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை நகரிய பகுதிகள், ஊராட்சிகளிலிருந்து நீக்கப்படாமலே தொடர்வதால் சர்ச்சை நீடிக்கிறது. இதனால், கல்பாக்கம், அணுபுரம் நகரிய பகுதிகளை, ஊராட்சிகளிலிருந்து விலக்க வேண்டுமென எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பேட்டி
கல்பாக்கம், அணுபுரம் ஆகிய டவுன்ஷிப் பகுதிகள், மத்திய அரசின் அணுசக்தி துறை நிர்வாகத்திற்கு உட்பட்டது. அதே துறைதான், டவுன்ஷிப் பகுதிகளை நிர்வாகம் செய்கிறது. அங்கு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வேலையே இல்லை. ஆனால், கல்பாக்கம் பகுதியை, புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகிய ஊராட்சிகளுடனும், அணுபுரத்தை நெய்குப்பி ஊராட்சியுடனும், ஒருங்கிணைத்தே, மாநில அரசு ஊராட்சியாக நிர்வகிக்கிறது. இதனால், சிக்கலும், நிர்வாக சீர்கேடும்தான் ஏற்படுகிறது. அடுத்த உள்ளாட்சி தேர்தலுக்குள், ஊராட்சிகளிலிருந்து, நகரிய பகுதிகளை நீக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள், புதுப்பட்டினம்