/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்ட கோவில்களில் கார்த்திகை தீப வழிபாடு விமரிசை
/
செங்கை மாவட்ட கோவில்களில் கார்த்திகை தீப வழிபாடு விமரிசை
செங்கை மாவட்ட கோவில்களில் கார்த்திகை தீப வழிபாடு விமரிசை
செங்கை மாவட்ட கோவில்களில் கார்த்திகை தீப வழிபாடு விமரிசை
ADDED : டிச 14, 2024 03:08 AM

திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப வழிபாடு நடந்தது.
திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. நான்கு வேதங்கள் மலைக்குன்றுகளாக வீற்று, ஒன்றின் உச்சிப் பகுதியில் வேதகிரீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார்.
பக்தர்கள் பவுர்ணமி நாளில், கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். நேற்று, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வேதகிரீஸ்வரர், நிலப்பகுதி பக்தவச்சலேஸ்வரர் ஆகிய கோவில்களில், நேற்று முன்தினம் மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
நேற்று காலை பஞ்சமூர்த்தி சுவாமியருக்கு, சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது.
மாலையில் கோவில் ஊழியர்கள், எண்ணெய் குடங்களுடன், மாடவீதிகளில் சென்று, பக்தர்கள் அளித்த தீப எண்ணெயுடன், வேதகிரீஸ்வரர் கோவிலை அடைந்தனர்.
அங்குள்ள கொப்பரையில் எண்ணெய் நிரப்பி, 6:00 மணியளவில் தீபம் ஏற்றினர். பக்தர்கள், ஓம் நமசிவாய என முழங்கி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, வீடுகளிலும் அகல் விளக்குகளில் தீபமேற்றினர்.
இரவு, சொக்கப்பனை விநாயகர் கோவில் அருகில் சொக்கப்பனை ஏற்றி பஞ்சமூர்த்தி சுவாமியர், வீதியுலா சென்றனர்.
தீப உற்சவத்தை முன்னிட்டு, பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், பரத பள்ளி குழுவினர் பரத நாட்டியம் நிகழ்த்தினர்.
திருக்கச்சூரில் மஹாதீபம்
சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் மலையடிவாரத்தில், பழமையான மருந்தீஸ்வரர் சமேத இருள் நீங்கி தாயார் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, மாலை நேரத்தில் மலை மீது, 111 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்படும்.
இந்த வகையில், நேற்று காலை 8:00 மணியளவில் கொப்பரை மற்றும் நெய், எண்ணெய் உள்ளிட்டவை மலை மீது பக்தர்களால் கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து, மாலை 6:05 மணியளவில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல இசையுடன் மஹா தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபம் மற்றும் பெருமாள் கார்த்திகை ஆகிய இரு நாட்களில், இரவு நேரங்களில் மாவளி சுற்றுதல் வழக்கம்.
அதன்படி, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு புறநகர் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், மாவளி சுற்றி கொண்டாடினர்.
மாவளி
கார்த்திகை தீபத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே, பனை மரத்தில் இருந்து ஆணங்காய் எடுத்து, அவற்றை நெருப்பிலிட்டு எரித்து மூட்டம் போட்ட பின், அதை குறிப்பிட்ட பதத்தில் எடுத்து, கரியை பொடியாக்க வேண்டும். அதை ஒரு துணியில் பரப்பி உருட்டி மூடி, பனைமட்டையை நான்காக வெட்டி, அதன் நடுவே வைத்து கட்டி, மாவளி தயாரிக்கப்படுகிறது.