/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
lகுண்டூர் ஏரி துார்வாரும் 'அம்ரூத்' திட்டத்தில்...சந்தேகம்:lஒரு பணி முடிவதற்குள் மற்றொரு பணி துவக்கம்
/
lகுண்டூர் ஏரி துார்வாரும் 'அம்ரூத்' திட்டத்தில்...சந்தேகம்:lஒரு பணி முடிவதற்குள் மற்றொரு பணி துவக்கம்
lகுண்டூர் ஏரி துார்வாரும் 'அம்ரூத்' திட்டத்தில்...சந்தேகம்:lஒரு பணி முடிவதற்குள் மற்றொரு பணி துவக்கம்
lகுண்டூர் ஏரி துார்வாரும் 'அம்ரூத்' திட்டத்தில்...சந்தேகம்:lஒரு பணி முடிவதற்குள் மற்றொரு பணி துவக்கம்
ADDED : ஜூன் 13, 2025 02:16 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு, குண்டூர் ஏரி சீரமைப்புக்கு,'அம்ரூத்' திட்டத்தில் நிதி ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில், அதே ஏரியில் சமூக பொறுப்பு நிதியின் கீழ், துார் வாரும் பணி துவக்கப்பட்டு உள்ளதால், கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
செங்கல்பட்டு நகரின் மையப்பகுதியில், 42 ஏக்கர் பரப்பளவில், குண்டூர் ஏரி உள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீர், கடந்த பல ஆண்டுகளுக்கு முன், விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
தற்போது குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால், நிலத்தடி நீருக்கான நீராதார பகுதியாக உள்ளது. தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக, இந்த ஏரியில் இருந்து 5 ஏக்கர் நிலம், 1987ம் ஆண்டு வழங்கப்பட்டது.
அப்போது, ஏரி கலங்கலை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். உபரிநீர் வெளியேறுவதை தடுக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள், பள்ளி நிர்வாகத்திற்கு விதிக்கப்பட்டன.
ஆனால், அதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அதன் பின், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், 2.5 ஏக்கர் இடத்தை விலைக்கு வாங்கி, அலுவலகம் கட்டியது. இதனால், தற்போது ஏரியின் பரப்பளவு, 29 ஏக்கராக குறைந்துள்ளது.
ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள மூன்று மலைகளிலிருந்தும், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர் பகுதிகளிலிருந்தும், ஏரிக்கு நீர்வரத்து உள்ளது.
ஆனால், அருகிலுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியில் கலக்கிறது.
அத்துடன், ஏரிக்கரை மற்றும் ஏரி பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பும் போது, ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் கரையை உடைத்து, தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர்.
இதனால், ஏரியில் தண்ணீர் சேமிக்க முடியாமல், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதை தவிர்க்க, செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏரியை துார்வாரி ஆழப்படுத்தவும், கரையை பலப்படுத்தி நடைபாதை அமைக்கவும், நீர்வளத்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து மனு அளித்தனர்.
இதன்படி, ஏரியை துார்வாரி சீரமைக்க நிதி கேட்டு, நீர்வளத்துறை அரசுக்கு கருத்துரு அனுப்பியது. ஆனால், நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளதால், துார்வாரி சீரமைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி கோரியது.
நீர்வளத் துறையின் அனுமதியை தொடர்ந்து, மத்திய அரசு திட்டமான 'அம்ரூத்' திட்டத்தில், 2022-23ம் ஆண்டு, 2.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இத்திட்டத்தில், ஏரியை துார்வாரி ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்துதல், நடைபாதை, மின் விளக்குகள் மற்றும் அலங்கார செடிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, 2023 மே மாதம் பணிகள் துவங்கின.
தற்போது, ஏரிக்கரையை பலப்படுத்துதல், நடைபாதைகள் அமைத்தல் பணிகள் மட்டும் நடந்துள்ளன. மற்ற பணிகள் நடைபெறவில்லை.
இந்த திட்டத்தில், ஏரி துார்வாரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஏரி துார்வாரப்படாமல் உள்ளது.
அதனால், ஏரி துார் வாருதல் பெயரில் முறைகேடு நடந்துள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், சமூக பொறுப்பு நிதி, 25.3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இந்த ஏரியை துார்வாரும் பணியை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார். தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி வாயிலாக, இப்பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
துவக்க விழாவில், சப் - கலெக்டர் மாலதி ெஹலன், நகரமன்ற தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் அன்புச்செல்வன், ஆணையர் ஆண்டவன், தாசில்தார் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.