மதுராந்தகம் தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் தாராளம்! தேர்தல் வெற்றியால் வாரி வழங்கியது அரசு
மதுராந்தகம் தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் தாராளம்! தேர்தல் வெற்றியால் வாரி வழங்கியது அரசு
UPDATED : அக் 21, 2026 07:12 AM
ADDED : அக் 20, 2026 09:14 PM

செங்கல்பட்டு: மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற வைத்த மக்களை குஷிப்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை முதல்வர் விஜய், பரிசாக வாரி வழங்கியுள்ளார்.
மதுராந்தகம் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், தி.மு.க., வேட்பாளர் பரந்தாமனை தோற்கடித்து, 20 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றியை தந்த மக்களுக்கு பரிசளிக்கும் வகையிலும், நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும் பல்வேறு திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதிக்கு நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* அத்திமனம் கிராமத்தில், புக்கத்துறை மடுவின் குறுக்கே, ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும்
* செம்பூண்டி ஊராட்சியில் உள்ள நீர்வளத்துறை ஏரியின் மதகுகள், 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்
* நெல்வாய் ஊராட்சியில் உள்ள மடுவை துார்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகள், 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்
* தின்னலுார் ஊராட்சியில், புதிய சமுதாய நலக்கூட கட்டடம், 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்
* மதுராந்தகம் தொகுதியில், தலா 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஆறு நெல் கொள்முதல் நிலையங்கள், 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இங்கு அறுவடையாகும் நெல்லை பாதுகாக்கும் வகையில், ஆத்துாரில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 20,000 டன் கொள்ளளவு கொண்ட திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையம் அமைக்கப்படும்
* மதுராந்தகம் தொகுதியில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 25 ஏக்கர் பரப்பளவில் மாநில விதை பண்ணை அமைக்கப்படும்
* அச்சரபாக்கத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும்
* பாலாற்றின் குறுக்கே படாளம் மற்றும் உதயம்பாக்கம் இடையே புதிய உயர்மட்ட தடுப்பணை கட்ட சாத்தியகூறுகள் ஆராயப்படும்
* கடந்த 1984ம் ஆண்டு அமைக்கப்பட்ட 30 கி.மீ., நீளமுள்ள மதுராந்தகம் கால்வாய் சீரமைக்கப்படும். இதன் வாயிலாக, 30 ஏரிகளுக்கு நீர் வரத்து கிடைக்க வழி வகை செய்யப்படும்
* மதுராந்தகம் அரசு மருத்துவமனையில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை பிரிவு அமைக்கப்படும்
* மதுராந்தகம் நகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி அமைக்கப்படும். இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கப்படும்
* பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வார சந்தை அமைக்கப்படும். புதிய மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்
* புக்கத்துறை அரசு உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்படும். கருங்குழியில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், மினி விளையாட்டு மைதானம், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
* மதுராந்தகம் துணை மின்நிலையத்தில், கூடுதலாக மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில், 25 மெகா வோல்ட் திறன்கொண்ட மின்வினியோக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படும்
* நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் வீடற்ற குடும்பங்களுக்கு நிரந்தரமான புதிய வீடுகள் கட்டித் தரப்படும்
* செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து கிராமங்களில் இருந்தும் விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை எடுத்து செல்லவும், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் எளிதாக பயணம் செய்யும் வகையிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த புதிய அறிவிப்புகளால், மதுராந்தகம் தொகுதி மக்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
