/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை ஒளிரும் தோட்டம் பணி ஒன்றரை மாதத்தில் முடிக்க இலக்கு
/
மாமல்லை ஒளிரும் தோட்டம் பணி ஒன்றரை மாதத்தில் முடிக்க இலக்கு
மாமல்லை ஒளிரும் தோட்டம் பணி ஒன்றரை மாதத்தில் முடிக்க இலக்கு
மாமல்லை ஒளிரும் தோட்டம் பணி ஒன்றரை மாதத்தில் முடிக்க இலக்கு
ADDED : பிப் 09, 2025 12:09 AM

மாமல்லபுரம்:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்காக, தனியார் பங்களிப்பு நிறுவனம் மாமல்லபுரத்தில்,'ஒளிரும் தோட்டம்' அமைக்கிறது. இப்பணிகளை ஒன்றரை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாமல்லபுரத்தில், தொல்லியல் துறை அலுவலகம் அருகில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்த 2009ல் மரகத பூங்கா அமைத்தது.
சுற்றுலா பயணியர் இளைப்பாற, தாவர பூங்கா அமைக்க வேண்டியது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இப்பூங்கா, புல்வெளி, கலைகள் நிகழ்த்தும் திறந்தவெளி மாடம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டது.
துவக்கத்தில் பயன்படுத்தப்பட்ட நிலையில், பின்னர் பயனின்றி சீரழிந்தது.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், கடந்த 2019ல் இங்கு சந்தித்த போது, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய புல்வெளியுடன் மேம்படுத்தப்பட்டது.
ஆனால், சுற்றுலா பயணியரை அனுமதிக்காமல், மீண்டும் வீணானது.
இவ்வளாகத்தை, சுற்றுலா பயன்பாட்டிற்கேற்ப மேம்படுத்த வலியுறுத்தப்பட்ட நிலையில், சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் முதலீட்டு பங்களிப்பில், 6 - 8 கோடி ரூபாய் மதிப்பில் ஒளிரும் தோட்டம் அமைக்க, கடந்த 2023ல் ஒப்பந்தம் அளித்தது.
ஒப்பந்த நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டு, பின் தீர்வு கண்டு, ஓராண்டு கடந்தே பணிகள் துவக்கப்பட்டன.
தற்போது, சில மாதங்களாக பணிகள் நடந்து வருகின்றன. வெளியிடத்தில் உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை இங்கு பொருத்தி, ஒளிரும் தோட்டம் ஏற்படுத்தப்பட உள்ளது.
நவீன எல்.இ.டி., விளக்கொளியில், மான் உள்ளிட்ட விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மிளிர்வது, தண்ணீர் பூங்கா, செயற்கை நீரூற்று ஆகியவை ஒளிர்வது, '5டி' தியேட்டரில் படம் ரசிப்பது, சிறுவர் விளையாட்டுப் பூங்கா, உணவகம் உள்ளிட்ட வசதிகளுடன், இந்த ஒளிரும் தோட்டம் அமைய உள்ளது.
அதற்கான கட்டமைப்புகளை நிறுவ, உறுதியான அடித்தளம் அமைக்க பெரிய பள்ளம் தோண்டிய போது, பணிகளை நிறுத்துமாறு தொல்லியல் துறை, பணி நிறுத்து ஆணை வழங்கியது.
ஆனாலும், தற்காலிக கட்டமைப்புகளே ஏற்படுத்துவதாக கூறி, தொடர்ந்து பணிகள் செய்து, தோண்டிய பள்ளங்களில் கான்கிரீட் அடித்தளம் அமைத்து, பள்ளங்கள் மூடப்பட்டன.
இந்த அடித்தளத்தின் மேற்பகுதியில், அதிகபட்சம் ஒன்றரை மாதத்திற்குள் கட்டமைப்புகளை நிறுவி, ஒளிரும் தோட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக, ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவித்து உள்ளனர்.

