/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை விளையாட்டு வளாகம் அமைச்சர் உதயநிதி அடிக்கல்
/
செங்கை விளையாட்டு வளாகம் அமைச்சர் உதயநிதி அடிக்கல்
செங்கை விளையாட்டு வளாகம் அமைச்சர் உதயநிதி அடிக்கல்
செங்கை விளையாட்டு வளாகம் அமைச்சர் உதயநிதி அடிக்கல்
ADDED : மார் 14, 2024 10:34 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு வளாகம் அமைக்க முடிவானது.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா, செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகம் அருகில் நேற்று நடந்தது.
இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று, புதிய விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.
அதோடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகளுக்கும், 784 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட தொகுப்புகளை, விளையாட்டு வீரர்களாகிய உங்களிடம் ஒப்படைக்க உள்ளோம்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் தனுஷ், சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில், 5 முறை இந்தியாவிற்காக பங்கேற்று, பல்வேறு பதக்கங்களை வென்றவர்.
சமீபத்தில் நடந்த 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டு போட்டிகளில், 38 தங்கப் பதக்கங்கள், 21 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 39 வெண்கலப் பதக்கங்கள் என, மொத்தமாக பதக்கப் பட்டியலில், 98 பக்கங்களுடன் முதல் முறையாக, தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீல்சேர் பென்சிங் வீராங்கனை சங்கீதா, ஒடிசாவில் நடந்த 'நேஷனல் வீல்சேர் பென்சிங் சாம்பியன்ஷிப்'பில் வெண்கல பதக்கம் வென்றார்.
இவர்கள் இருவரையும் மேடையில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இங்கே இருக்கக்கூடிய ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், அவர்கள் முன்னுதாரணமாக உள்ளனர்.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள் 650 பேருக்கு, 16.24 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, கலெக்டர் அருண்ராஜ், வனக்குழு தலைவர் திருமலை, ஆலப்பாக்கம் ஊராட்சி தலைவர் பரிமளா, ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

