/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழுப்பேடு சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
/
தொழுப்பேடு சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 25, 2025 10:37 PM

சித்தாமூர்: நெற்குணத்தில் செயல்படும் கல்குவாரிக்கு வந்து செல்லும் அதிக லாரிகளால், சூணாம்பேடு - தொழுப்பேடு நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சித்தாமூர் அடுத்த நெற்குணம் கிராமத்தில் சூணாம்பேடு - தொழுப்பேடு இடையே செல்லும் 19 கி.மீ., நெடுஞ்சாலை உள்ளது.
இச்சாலை சிறுமயிலுார், ஆத்துார், கோட்டைப்புஞ்சை, துாதுவிளம்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பிரதான சாலையாக உள்ளது.
சாலையில் பள்ளி மாணவ - மாணவியர், விவசாயிகள் என, தினமும் ஏராளமானோர் சூணாம்பேடு, தொழுப்பேடு, அச்சிறுப்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்ல, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
நெற்குணம் பகுதியில் செயல்படும் கல்குவாரி மற்றும் ஈசூர் பகுதியில் கிரஷர்களுக்கு தினசரி ஏராளமான லாரிகள், அதிக பாரம் ஏற்றிச் செல்கின்றன. இதனால் சூணாம்பேடு - தொழுப்பேடு சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளது. கோடை காலத்தில் சாலையில் புழுதி பறப்பதாகவும், மழைக்காலத்தில் சாலை சகதியாக மாறுவதாகவும், வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால், சாலையில் செல்பவர்கள் பள்ளத்தால் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

