/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆக்கிரமிப்பால் வழிமாறும் நந்திவரம் ஏரி நீரால்...தவிப்பு!: குடியிருப்புகளில் பாய்வதால் ஆண்டுதோறும் அவதி
/
ஆக்கிரமிப்பால் வழிமாறும் நந்திவரம் ஏரி நீரால்...தவிப்பு!: குடியிருப்புகளில் பாய்வதால் ஆண்டுதோறும் அவதி
ஆக்கிரமிப்பால் வழிமாறும் நந்திவரம் ஏரி நீரால்...தவிப்பு!: குடியிருப்புகளில் பாய்வதால் ஆண்டுதோறும் அவதி
ஆக்கிரமிப்பால் வழிமாறும் நந்திவரம் ஏரி நீரால்...தவிப்பு!: குடியிருப்புகளில் பாய்வதால் ஆண்டுதோறும் அவதி
ADDED : டிச 30, 2024 01:59 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், மிகவும் பழமையான நந்திவரம் பெரிய ஏரி உள்ளது. இது நந்திவரம், ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரி, காட்டூர், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வுக்கும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
மொத்தம் 304 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, 6.1 கி.மீ., சுற்றளவுடன், 10 அடி ஆழம் உடையது. சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால்வாய் வாயிலாக, ஏரிக்கு நீர்வரத்து வருகிறது.
ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகமானதால், மழைக்காலத்தில் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியவுடன், உபரி நீர் வெளியேறி அருகிலுள்ள மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர், உதயசூரியன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புகுந்து, தரை தளத்தில் உள்ள வீடுகளுக்குள் பாய்கிறது.
அந்த நேரத்தில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் சம்பவம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, நந்திவரம் ஏரியின் உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறி நந்திவரம், மகாலட்சுமி நகர், ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர், ஆதனுார் வழியாக மண்ணிவாக்கம் சென்று, அடையாறு ஆற்றில் கலக்கிறது.
அப்போது, வழியிலுள்ள குடியிருப்புகளில் புகுந்து, அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ளத்தால் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன், 75, என்பவர் கூறியதாவது:
நந்திவரம் பெரிய ஏரியைச் சுற்றி, 10 ஏக்கருக்கு மேல், ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஏரிக்கு வடக்கில் கலங்கல் ஒன்றும், காட்டூர் பகுதியில் கலங்கல் ஒன்றும் உள்ளன.
ஏரி முழு கொள்ளளவை எட்டியதும் கலங்கல வழியாக செல்லும் உபரி நீர், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், ஏரியின் கலங்கல் அருகில் முதல் மதகு உள்ளது. இந்த முதல் மதகின் வழியாக உபரி நீரை வெளியேற்ற, 10 அடி அகலம், ஏழடி ஆழத்தில் கால்வாய் இருந்தது.
ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள இடங்களை வாங்கி, இந்த உபரி நீர் செல்லும் கால்வாயையும் மூடி, 'பிளாட்' போட்டு விற்பனை செய்துவிட்டனர்.
இதனால், இந்த கால்வாய் வழியாக ஊரப்பாக்கம் ஏரிக்கு உபரிநீர் செல்வது தடைபட்டுள்ளது. இந்த நீர்வழிப் பாதை முற்றிலும் அடைக்கப்பட்டு உள்ளதால், அந்த நீர் மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து விடுகிறது.
மேலும், ஏரியின் முதலாவது மதகு அருகில், விவசாய நிலத்தில் மிகப்பெரிய கிணறு ஒன்றும் இருந்தது.
அந்த கிணற்றையும், ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் மண்ணை நிரப்பி மூடிவிட்டனர். ஏரியின் முதல் பகுதியில் இருந்த கால்வாய் முற்றிலுமாக மூடப்பட்டதால், இப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ள முடியாமல், விவசாயிகள் தங்களது நிலங்களை தரிசு நிலங்களாக போட்டுள்ளனர்.
நந்திவரம் ஏரியின் தெற்கு பகுதி, மேற்கு பகுதியிலும், அதிகமான வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை துார்வாரி, கரைகளை பலப்படுத்தி, சுற்றி வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும்.
அத்துடன், ஏரியின் கரைகளைச் சுற்றி பனை விதைகள், தென்னை மரங்கள் நடவு செய்து, மழைக் காலங்களில் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் நுழையாதவாறு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நந்திவரம் பெரிய ஏரியை துார் வாரவும், மழைக்காலங்களில் அதிக நீர் வெளியேறி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, நகராட்சி சார்பில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, ஏற்கனவே கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த விஷயத்தில் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பில் இருந்து சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.
-ஜி.கே.லோகநாதன்,
துணைத் தலைவர்,
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி.
மழைக் காலங்களில் நந்திவரம் பெரிய ஏரியின் உபரி நீரும், ஊரப்பாக்கம் ஏரியின் உபரி நீரும் அதிக அளவில் வெளியேறி மகாலட்சுமி நகர், ஊரப்பாக்கம், ஜெகதீஷ் நகர், பிரியா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்படாதவாறு, நிரந்தர தீர்வாக ஏரியின் கரைகளை பலப்படுத்தி, துார் வாரி அதிக அளவில் நீரை சேமிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிருஷ்ணன்,
சமூக ஆர்வலர்,
ஊரப்பாக்கம்.