/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்லிக்குப்பம் பொங்கல் சுற்றுலா விழா வெளிநாட்டு பயணியர் கொண்டாட்டம்
/
நெல்லிக்குப்பம் பொங்கல் சுற்றுலா விழா வெளிநாட்டு பயணியர் கொண்டாட்டம்
நெல்லிக்குப்பம் பொங்கல் சுற்றுலா விழா வெளிநாட்டு பயணியர் கொண்டாட்டம்
நெல்லிக்குப்பம் பொங்கல் சுற்றுலா விழா வெளிநாட்டு பயணியர் கொண்டாட்டம்
ADDED : ஜன 13, 2025 01:05 AM

திருப்போரூர்:நெல்லிக்குப்பத்தில் நடந்த பொங்கல் சுற்றுலா விழாவில், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் பங்கேற்று கொண்டாடினர்.
தமிழக சுற்றுலாத்துறை சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் சுற்றுலா விழா நடத்தப்படுகிறது.
நேற்று, திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியில், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது,
இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணியரை, மாமல்லபுரம் அலுவலகத்திலிருந்து பேருந்துகளில், நெல்லிக்குப்பம் கிராமத்திற்கு சுற்றுலாத் துறையினர் அழைத்து வந்தனர்.
அப்பகுதி நெல்லீஸ்வரர் கோவில் அருகில், விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அங்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியரை, செங்கல்பட்டு மாவட்ட சப் - -கலெக்டர் நாராயண சர்மா, பயிற்சி சப் -- கலெக்டர் மாலதி ஆகியோர் மலர் மாலை, அங்கவஸ்திரம் அணிவித்து, தமிழர் கலாசார முறையில் வரவேற்றனர்.
தொடர்ந்து அவர்களுக்கு பெண்கள் சந்தனம், குங்குமம் இட்டனர்.
கோவில் முன், பானைகளில் பச்சரிசி, நெய், வெல்லம், ஏலக்காய் இட்டு, தண்ணீர் நிரப்பி பொங்கல் வைக்கப்பட்டது. பானையில் பொங்கல் பொங்கிய போது, சுற்றுலா பயணியர் பொங்கலை கிளறி மகிழ்ந்தனர்.
பரதநாட்டியம், கரகம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அங்கு நடைபெற்றன. சுற்றுலா பயணியர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நடனமாடி மகிழ்ந்தனர்.
விழா பகுதியில் கரும்புகள், வாழை மரம், வண்ண தோரணங்கள், வண்ண கோலங்கள் உட்பட பல்வேறு உணவு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
சிலம்பாட்டம், மண் பானை தயாரிப்புகளை, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர். உறியடி போட்டியில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
மேலும் அவர்கள், மாட்டுவண்டியில் உலா பகுதிகளை சுற்றிப் பார்த்தனர்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், நெல்லிக்குப்பம் ஊராட்சித் தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெளிநாட்டு பயணியர் உட்பட கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு, நினைவு பரிசளிக்கப்பட்டது.
நிறைவில், அனைவருக்கும் அறுசுவை சைவ உணவு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, சுற்றுலா பயணியர் கூறியதாவது:
எங்களுடைய இந்த பொங்கல் விழா சுற்றுலா பயணம், மிகவும் மகிழ்ச்சி தந்தது. இங்கு நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டதிலும், பார்வையாளராக பார்த்ததிலும் மகிழ்ச்சி அடைந்தோம். மாட்டு வண்டி பயணம் மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக, வித்தியாசமானதாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.