/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் மேம்பாலத்தில் மீண்டும் சத்தம் பழுது பார்க்கும் பணிகள் துவக்கம்
/
வண்டலுார் மேம்பாலத்தில் மீண்டும் சத்தம் பழுது பார்க்கும் பணிகள் துவக்கம்
வண்டலுார் மேம்பாலத்தில் மீண்டும் சத்தம் பழுது பார்க்கும் பணிகள் துவக்கம்
வண்டலுார் மேம்பாலத்தில் மீண்டும் சத்தம் பழுது பார்க்கும் பணிகள் துவக்கம்
ADDED : நவ 14, 2025 01:27 AM

வண்டலுார்:வண்டலுார் ரயில் நிலைய மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது, மீண்டும் காதைப் பிளக்கும் சத்தம் வரும் நிலையில், மூலகாரணம் கண்டறியப்பட்டு, இனி சத்தமே வராத வகையில், பழுது பார்க்கும் பணியை நெடுஞ்சாலை துறை முடுக்கி விட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ரயில் நிலையம் அருகே, வாலாஜாபாத் சாலையுடன் ஜி.எஸ்.டி., சாலையை இணைக்கும்படி, ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு, 2012ல் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த பாலத்தின், மேல்பகுதியில், 84 சிமென்ட் சட்டங்கள், இணைப்பாக உள்ளன. இந்த சிமென்ட் சட்டங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்க, 'எக்ஸ்பன்ஷன் ஜாய்ன்டு' எனப்படும், இரும்பு தகடுகள் பொருத்தப்பட் டு உள்ளன.
நடப்பாண்டு துவக்கத்தில், வாகனங்கள் மேம்பாலத்தில் செல்லும் போது, சில இரும்பு தகடுகளிலிருந்து காதைப் பிளக்கும் சத்தம் எழுந்தது.
இதையடுத்து மேம்பாலத்தை ஆய்வு செய்த தமிழக நெடுஞ்சாலை அதிகாரிகள், 33 இடங்களில் இரும்பு தகடுகள் சேதமாகியிருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 45 நாட்கள் தொடர்ந்து பணி செய்து, அனைத்து இரும்பு தகடுகளையும் சீரமைத்தனர்.
இந்நிலையில், சீரமைக்கப்பட்ட இரும்பு தகடுகள் மீண்டும் சேதமாகி, மேம்பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும் போது, காதைப் பிளக்கும் சத்தம் மீண்டும் உருவானது.
இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் இரும்பு தகடுகளை சீர்செய்யும் பணி நடந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது, மீண்டும் இரும்பு தகடுகளிலிருந்து பயங்கர சத்தம் எழுந்தது.
இதையடுத்து, பல தரப்பிலிருந்தும் நெடுஞ்சாலை துறையினருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து நேற்று முன்தினம் மேம்பாலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின், இரும்பு தகடுகளை பெயர்த்து எடுத்து, புதிய இரும்பு தகடுகளை பொருத்தும் பணியை, நேற்று காலை துவக்கினர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது:
வண்டலுார் ரயில் நிலைய மேம்பாலத்தில், அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலான எடையில் பொருட்களை ஏற்றிக்கொண்டு, மிக அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இதனால், சிமென்ட் சட்டங்கள் இடையே பொருத்தப்பட்டுள்ள இரும்பு சட்டங்கள், பாரம் தாங்காமல் சேதமடைந்துள்ளன.
இந்த இரும்பு சட்டங்களை பழுது பார்த்து, மீண்டும் சிமென்ட் சட்டங்களோடு பொருத்தினால், சில மாதங்கள் மட்டுமே தாக்கு பிடிக்கும். மீண்டும் உடைந்து சேதமாகி, சத்தம் வரும்.
எனவே, சேதமாகியுள்ள இரும்பு சட்டங்களை முற்றிலுமாக நீக்கி, புதிய இரும்பு சட்டங்களை பொருத்தும் பணி, நேற்று காலை துவக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைய இரு வாரங்கள் ஆகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

