/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரனூர் சுங்கச்சாவடி காலாவதியாகியும் வசூல்சுரண்டல்!:லாரி உரிமையாளர்கள் சங்கம் போலீசில் புகார்
/
பரனூர் சுங்கச்சாவடி காலாவதியாகியும் வசூல்சுரண்டல்!:லாரி உரிமையாளர்கள் சங்கம் போலீசில் புகார்
பரனூர் சுங்கச்சாவடி காலாவதியாகியும் வசூல்சுரண்டல்!:லாரி உரிமையாளர்கள் சங்கம் போலீசில் புகார்
பரனூர் சுங்கச்சாவடி காலாவதியாகியும் வசூல்சுரண்டல்!:லாரி உரிமையாளர்கள் சங்கம் போலீசில் புகார்
ADDED : பிப் 13, 2024 10:58 PM

செங்கல்பட்டு: பரனுார் சுங்கச்சாவடியின் உரிமம், கடந்த 2019ம் ஆண்டே காலாவதியாகியும் வசூல் வேட்டை தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடி செயல்பாடுகளுக்கான அறிக்கையில், 28 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுத்து, முறைகேடாக வசூலிக்கப்பட்ட பணத்தை மீட்க வேண்டும் என, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனுார் பகுதியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.
சென்னையின் நுழைவாயிலாக உள்ள இந்த சுங்கச்சாவடியை, தினமும் 80,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வரும் தென் மாவட்டங்களை சேர்ந்தோர் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் போது, இந்த பகுதியை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும்.
இந்த சுங்கச்சாவடி, கடந்த 2019ம் ஆண்டே காலாவதியாகியும், தொடர்ந்து செயல்பட்டு வருவதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான சி.ஏ.ஜி., அறிக்கை மூலம் தெரிய வந்தது.
மேலும், கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் முதல் 2020 ஜூன் மாதம் வரை, 11 மாதங்களில் இந்த சுங்கச்சாவடியை, கடந்த 1.17 கோடி வாகனங்களில், 62.33 லட்சம் வாகனங்கள், வி.ஐ.பி.,க்களின் வாகனங்கள் மற்றும் கட்டணம் செலுத்தாத வாகனங்கள் என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கை வெளிவந்ததில் இருந்து, இப்பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கங்கள், சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என, பல்வேறு ஆர்ப்பாட்டங்களை அடுத்தடுத்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
பரனுார் சுங்கச்சாவடி கடந்த 2019ம் ஆண்டு காலாவதியாகி விட்டது. சி.ஏ.ஜி., அறிக்கையின்படி, 28 கோடி ஊழல் நடைபெற்று உள்ளது தெரியவந்துள்ளது.
மக்கள் மற்றும் அரசின் பணத்தை ஏமாற்றி, முறைகேட்டில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் மற்றும் மேலாளர்கள் மீது, கொள்ளை, சுரண்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பணத்தை மீட்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரை பெற்றுக்கொண்ட செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புகழ், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
சுங்கச்சாவடிகளில் கட்டணக் கொள்ளை குறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் கோ.கணேஷ் கூறியதாவது:
பரனுார் சுங்கச்சாவடியை பொறுத்தவரை, சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே, அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம்.
கடந்த 2020ம் ஆண்டு, அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், சுங்கச்சாவடி முழுதும் அடித்து உடைக்கப்பட்டது.
அதன்பின், 40 நாட்கள் சுங்கச்சாவடி மூடப்பட்டு, வாகனங்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டன.
மாநகராட்சி, நகராட்சிகளைச் சுற்றி, 10 கி.மீ., தொலைவுக்குள் சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது என விதி உள்ளது. இந்த சுங்கச்சாவடி, செங்கல்பட்டு நகராட்சிக்கு மிக அருகில் உள்ளது.
மேலும், 15 ஆண்டுகளை கடந்த சுங்கச்சாவடிகளில், 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை துறை சட்டம் உள்ளது.
சாலை சரியாக பராமரிக்கவில்லை என்றால், 50 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என, 2022ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல இடங்களில், நெடுஞ்சாலையில் விளக்குகள் அமைக்கப்படவில்லை. ஆனால், சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டணத்தை மட்டும் சுரண்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

