/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தை தவிர்க்கும் பஸ்கள் கால்கடுக்க காத்திருக்கும் பயணியர் அதிருப்தி
/
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தை தவிர்க்கும் பஸ்கள் கால்கடுக்க காத்திருக்கும் பயணியர் அதிருப்தி
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தை தவிர்க்கும் பஸ்கள் கால்கடுக்க காத்திருக்கும் பயணியர் அதிருப்தி
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தை தவிர்க்கும் பஸ்கள் கால்கடுக்க காத்திருக்கும் பயணியர் அதிருப்தி
UPDATED : அக் 25, 2025 03:04 AM
ADDED : அக் 25, 2025 02:35 AM

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில், 2 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் இருந்தும், தாம்பரம் -- செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் உள்ளே வந்து செல்லாததால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கிருந்து, 30,000க்கும் மேற்பட்டோர், பேருந்து வாயிலாக சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளுக்கு வேலை, கல்வி, மருத்துவ சேவை உள்ளிட்ட பிற தேவைகளுக்காக தினமும் பயணிக்கின்றனர்.
இங்கு ஜி.எஸ்.டி., சாலை ஓரத்தில், 2 ஏக்கர் பரப்பளவில், அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து, செங்கல்பட்டு மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு நேரடியாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே, பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து செல்கின்றன.
தவிப்பு
ஆனால், தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கத்திலிருந்து மறைமலை நகர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் உள்ளே வருவதில்லை.
மாறாக, பேருந்து நிலையத்தின் வெளியே, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள நிறுத்தத்தில், பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை வசதி இல்லை.
இதனால், பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் என, அனைத்து பயணியரும் தங்களுக்கான பேருந்து வரும் வரை, கால் கடுக்க நிற்கும் சூழல் உள்ளது. தவிர வெயில், மழையால் தவிக்கும் நிலை தொடர்கிறது.
அனைத்து பேருந்துகளும் வந்து செல்லாததால், 2 ஏக்கர் பரப்பில் உள்ள கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் வீணாகி வருகிறது.
முக்கியமாக, பொதுமக்கள் பயன்பாடு குறைவாக இருப்பதால், சமூக விரோதிகளின் கூடாரமாகவும், தனியார் வாகனங்களின் 'பார்க்கிங்' இடமாகவும், இந்த பேருந்து நிலையம் மாறி வருவதாக, பல தரப்பிலிருந்தும் புகார்கள் குவிகின்றன.
கோரிக்கை
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
நந்திவரம், கூடுவாஞ்சேரி ஆகிய இரு ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, 1976ல் நந்திவரம் -- கூடுவாஞ்சேரி பேரூராட்சி என, தரம் உயர்த்தப்பட்டது.
மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் பேருந்து பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பால், நந்திவரம் -- கூடுவாஞ்சேரியில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர் கோரிக்கை எழுந்தது.
இதனால், 2006 - 2011 காலத்தில் பொறுப்பு வகித்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து, 78.50 லட்சம் ரூபாய் செலவில், 2 ஏக்கர் பரப்பளவில், ஜி.எஸ்.டி., சாலை ஓரத்தில் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தது.
பயணியர் ஓய்வறை, இரு பாலினத்தவருக்கும் தனித்தனி கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வணிக வளாகங்களுடன் கூடிய இந்த பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிற்பதற்கும், 10 பேருந்துகள் வந்து செல்லவும் இடவசதி உள்ளது.
இங்கிருந்து கோயம்பேடு, சோழிங்கநல்லுார், திருப்போரூர், கீரப்பாக்கம், பம்மல், பூந்தமல்லி, வடபழனி, திருவான்மியூர், பிராட்வே, தி.நகர், நங்கநல்லுார், பொழிச்சலுார் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே, இந்த பேருந்து நிலையம் உள்ளே வந்து, பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.
ஆனால் மீஞ்சூர், தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கத்திலிருந்து மறைமலை நகர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட பல இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், இந்த பேருந்து நிலையம் உள்ளே வருவதில்லை.
நெரிசல்
பேருந்து நிலையம் வெளியே, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள நிறுத்தத்தில் நின்று, பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. தவிர, ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு பேருந்துகள் வந்து நிற்கும் போது, ஜி.எஸ்.டி., சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்துகளும் அரங்கேறுகின்றன.
ஓய்வறை, கழிப்பறை, குடிநீர் வசதி, போதிய இருக்கைகள் என, 2 ஏக்கர் பரப்பில் அனைத்து வசதிகளுடன் பெரிய அளவிலான பேருந்து நிலையம் செயல்பாட்டில் இருக்கும் போது, அதன் வெளியே, பிரதான சாலையில் பேருந்தை நிறுத்த தேவையில்லை.
அனைத்து பேருந்துகளும் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் உள்ளே வந்து சென்றால் வெயில், மழை இடையூறின்றி, பாதுகாப்புடன் அனைவரும் பயணிக்க முடியும்.
தவிர, ஜி.எஸ்.டி., சாலையில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளையும், விபத்துகளையும் தவிர்க்க முடியும். எனவே, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் உள்ளே அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும்படி, போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

