/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவுநீர் கலந்த குடிநீரால் மேலும் 17 பேர் பாதிப்பு எண்ணிக்கை 60ஐ தாண்டியதால் மக்கள் பீதி
/
கழிவுநீர் கலந்த குடிநீரால் மேலும் 17 பேர் பாதிப்பு எண்ணிக்கை 60ஐ தாண்டியதால் மக்கள் பீதி
கழிவுநீர் கலந்த குடிநீரால் மேலும் 17 பேர் பாதிப்பு எண்ணிக்கை 60ஐ தாண்டியதால் மக்கள் பீதி
கழிவுநீர் கலந்த குடிநீரால் மேலும் 17 பேர் பாதிப்பு எண்ணிக்கை 60ஐ தாண்டியதால் மக்கள் பீதி
ADDED : டிச 07, 2024 12:53 AM

பல்லாவரம், பல்லாவரத்தில் வினியோகிக்கப்பட்ட கழிவுநீர் கலந்த குடிநீரால், நேற்று முன்தினம் மூவர் பலியாகினர்; பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றும் 17 பேர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளானோர் எண்ணிக்கை, 60ஐ தாண்டியுள்ளதால், பகுதிவாசிகளிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
சென்னை புறநகர், பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் மலைமேடு மற்றும் தாம்பரம் மாநகராட்சி, காமராஜர் நகர் பகுதிகளுக்கு பாலாற்று குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இப்பகுதிகளுக்கு சமீபத்தில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் மாசடைந்தும், நிறம் மாறியும், துர்நாற்றத்துடனும் இருந்துள்ளது.
இந்த கழிவுநீர் கலந்த குடிநீர் பருகியதால், அப்பகுதிவாசிகளுக்கு டிச., 4ம் தேதி இரவு வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து அவர்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்று 14 பேர் வீடு திரும்பினர். 19 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், நேற்று முன்தினம் காலையும், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், கன்டோன்மென்ட் பல்லாவரம் மோகனரங்கன், 42, வரலட்சுமி, 88, மற்றும் காமராஜர் நகர் திருவேதி, 56, ஆகியோர் பலியாகினர். இம்மூவரும், தாம்பரம் மாநகராட்சி வினியோகித்த குடிநீரால் இறக்கவில்லை; வயோதிகம் மற்றும் ஏற்கனவே உடல்நல பாதிப்பு இருந்ததால் இறந்ததாக, மாநகராட்சி மற்றும் அமைச்சர்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வாந்தி, பேதி காரணமாக, மேலும் 17 பேர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்றைய நிலவரப்படி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 36 பேர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் எட்டு பேர், பல்லாவரம் தனியார் மருத்துவமனையில் ஆறு பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 60யை தாண்டியுள்ளதால், குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போர் பீதி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், ஆறு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள் இணைந்து, வீடு வீடாக சென்று, ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.
கன்டோன்மென்ட் மலைமேடு பகுதியில் நேற்று, லாரி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தண்ணீர் தொட்டி, துாய்மைப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை ஆகியோர் நேற்று நேரில் சந்திந்து, நலம் விசாரித்தனர்.
கவனம் தேவை
பல்லாவரம் நகராட்சியாக இருந்த போது, மழைக்காலத்திற்கு முன் தண்ணீரை காய்ச்சி குடிக்குமாறு அறிவுறுத்துவர். வீடுதோறும் குளோரின் மாத்திரை வழங்குவர். தொட்டிகளில் குளோரின் பவுடர் கலந்து குடிநீர் வினியோகிப்பர். மாநகராட்சியாக உயர்த்தப்பட்ட பின், அதுபோன்ற நடவடிக்கை இல்லை. குடிநீரில் கழிவுநீர் கலந்தாலும் தெரிவதில்லை. நிறம் மாறிய குடிநீர் வழங்கப்பட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி முழுதும், குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. வரும் காலங்களில், குடிநீர் விஷயத்தில் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும்.
- வி.சந்தானம், 86,
சமூக ஆர்வலர், குரோம்பேட்டை.
சென்னையில், குடிநீர் வினியோகிக்கும் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா என்றால், நிச்சயம் இல்லாத சூழல்தான். தி.மு.க.,வின் 42 மாத ஆட்சியில், குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக, பல இடங்களிலிருந்து புகார்கள் வந்த நிலையிலும், தி.மு.க., அரசு அதை கண்டு கொள்வதில்லை. தி.மு.க., அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்துக்குரியது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா, 10 லட்சம் ரூபாய் நிவராண உதவி வழங்க வேண்டும்.
- பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் துாய்மை தன்மையை உறுதி செய்ய, மாநகராட்சி சார்பில் குழு அமைக்க வேண்டும்; குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேல், மாநிலத்தில் எங்கும் நடக்காமல் இருக்கவும் தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
- ஜி.கே.வாசன், தலைவர், த.மா.கா.,
கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்து மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. இதற்கு அரசே முழு பொறுப்பு. மீன் சாப்பிட்டதால் தான் உடல் உபாதை ஏற்பட்டதாக, அமைச்சர் அன்பரசன் கூறியது, முழு பூசணிக்காயை, சோற்றில் மறைக்கும் செயல். முழுக்க முழுக்க அரசின் கவனக்குறைவே இதற்கு காரணம். அன்பரசன் பேச்சு கண்டனத்திற்குரியது. இந்த சம்பவத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணமாக, தலா 10 லட்சம் ரூபாயும், உடல்நிலை பாதித்தோருக்கு நிவாரணமாக தலா 5 லட்சம்ரூபாயும், அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
- பிரேமலதா,
தே.மு.தி.க., பொதுச் செயலர்.