/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறு மழைக்கே மூழ்கும் தெருக்கள் ஊரப்பாக்கத்தில் மக்கள் தவிப்பு
/
சிறு மழைக்கே மூழ்கும் தெருக்கள் ஊரப்பாக்கத்தில் மக்கள் தவிப்பு
சிறு மழைக்கே மூழ்கும் தெருக்கள் ஊரப்பாக்கத்தில் மக்கள் தவிப்பு
சிறு மழைக்கே மூழ்கும் தெருக்கள் ஊரப்பாக்கத்தில் மக்கள் தவிப்பு
ADDED : அக் 19, 2025 09:21 PM

ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கம், ராம் நகர் பிரதான சாலை மற்றும் விரிவு பகுதியில் உள்ள 14 தெருக்களின் சாலைகள், சிறு மழைக்கே சகதியாக மாறுவதால், நடந்து செல்ல கூட முடியாமல், அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள, 15 வார்டுகளில், 80,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பரப்பிலும், மக்கள் தொகையிலும் பேரூராட்சிக்கு இணையாக உள்ள ஊரப்பாக்கம் ஊராட்சியில், மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய அடிப்படை கட்டுமானங்கள் போதுமானதாக இல்லை.
குறிப்பாக, 70 சதவீத தெருக்களில் சாலை, மழைநீர் வடிகால் வசதிகள் முறையாக இல்லை.
இதில், 8வது வார்டுக்கு உட்பட்ட ராம் நகர் பிரதான சாலை மற்றும் 2வது வார்டுக்கு உட்பட்ட ராம் நகர் விரிவு பகுதிகளில் உள்ள, 14 தெருக்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கின்றனர்.
இந்த 14 தெருக்களிலும் சாலை வசதி இல்லை.
குண்டும் குழியுமாக உள்ள சாலை, சிறு மழைக்கே குளம்போல் தண்ணீர் தேங்கி, மக்கள் நடமாட கூட லாயக்கற்ற நிலைக்கு மாறி விடுகிறது.
தவிர, பிரதான சாலையில் மட்டுமே சிறிய அளவிலான மழைநீர் வடிகால் உள்ளது. அதுவும் துார் வாரப்படாமல் சகதியாக உள்ளது. அதில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதால், மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது.
குறிப்பாக, 5 செ.மீ., அளவில் மழை பெய்தால் கூட, சாலை முழுதும் நீர் தேங்கி சகதியாக மாறி, நடக்கவே லாயக்கற்ற வழித்தடமாக மாறிவிடுகிறது.
சாலையில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைவது தினமும் அரங்கேறுகிறது.
இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிடும் போதெல்லாம், தற்காலிக நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படுகிறது. நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை இல்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து, நிரந்தர தீர்வாக சாலை மற்றும் உரிய மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.