/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மைய தடுப்பை உடைத்து வழி ஏற்படுத்துவதால் விபத்து அபாயம்
/
மைய தடுப்பை உடைத்து வழி ஏற்படுத்துவதால் விபத்து அபாயம்
மைய தடுப்பை உடைத்து வழி ஏற்படுத்துவதால் விபத்து அபாயம்
மைய தடுப்பை உடைத்து வழி ஏற்படுத்துவதால் விபத்து அபாயம்
ADDED : அக் 19, 2025 09:20 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் மையத் தடுப்பு பகுதிகளை உடைத்து வழி ஏற்படுத்தப்பட்ட இடங்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு அருகே பரனுார் சுங்கச்சாவடியில் இருந்து அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாவடி வரை, 50 கி.மீ., துாரம், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இதில் மாமண்டூர், புக்கத்துறை, படாளம், ஜானகிபுரம், மேலவலம்பேட்டை, கருங்குழி, மதுராந்தகம், அய்யனார் கோவில், பாக்கம், சிறுநாகலுார், ஊனமலை, சோத்துப் பாக்கம், மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம், அறப்பேடு, தொழுப்பேடு உள்ளிட்ட பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு பிரிந்து செல்லும் நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகள் உள்ளன.
இதில் சில இடங்களில், 'யு - டர்ன்' அமைக்கப்பட்டு, வாகனங்கள் திரும்பிச் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது, சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உணவகங்கள் மற்றும் தனியார் வீட்டு மனைகள் உள்ளிட்டவை, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த இடங்களில் வழியின்றி தடுப்புகள் உள்ளதால், வாகன ஓட்டிகள் தங்கள் வசதிக்கேற்ப, மையத்தடுப்பை உடைத்து, குறுக்கு வழி ஏற்படுத்துகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இரு மார்க்கத்திலும் செல்லும் வாகன ஓட்டிகள், இந்த குறுக்கு வழி உள்ள இடங்களில் சாலையைக் கடக்கும் வாகனங்களால், விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
அடிக்கடி, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், கிராமப் பகுதிகளுக்குச் செல்வதற்காக சாலை மையத் தடுப்பை உடைத்து ஏற்படுத்தப்பட்ட வழிகளை மூட வேண்டும்.
வாகனங்கள் சாலையைக் கடக்கும் வகையில் அமைக்கப்பட்ட 'யு - டர்ன்' பிரிவு பகுதிகளில் மட்டுமே வாகனங்கள் கடக்கும் வகையில் செய்ய வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையின் மையத் தடுப்பு பகுதிகளை உடைத்து வழி ஏற்படுத்தப்பட்ட இடங்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.