/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பழமத்துார் ஊராட்சியில் சுகாதார சீர்கேடு
/
தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பழமத்துார் ஊராட்சியில் சுகாதார சீர்கேடு
தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பழமத்துார் ஊராட்சியில் சுகாதார சீர்கேடு
தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பழமத்துார் ஊராட்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 19, 2025 09:19 PM

மதுராந்தகம்:புக்கத்துறை அடுத்த பழமத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட விவேகானந்தர் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக பழமத்துார் கிராமம் அமைந்துள்ளது.
தற்போது, சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புக்கத்துறை -- உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையை வாகனங்கள் கடக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலை துறையினர், சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைத்து வருகின்றனர். ஆனால், பழமத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களின் உயரங்களைக் காட்டிலும், 5 அடிக்கும் அதிகமான உயரத்தில் மழைநீர் வடிகால்வாய்களை அமைத்துள்ளனர்.
இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் வடிகால் நீர் வெளியேறும் வகையில், ஊராட்சியின் கால்வாயை தேசிய நெடுஞ்சாலை கால்வாயுடன் இணைக்க வேண்டும் என, கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், முறையான திட்டமிடலின்றி கால்வாய் கட்டி உள்ளதால், 5 அடி உயரத்திற்கு பழமத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம தெருக்களில், கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் தாழ்வாக உள்ளன.
இதனால், ஊராட்சியில் இருந்து கால்வாய் மூலம் வெளியேறும் கழிவுநீர் முழுதுமாக வெளியேற முடியாமல், ஆங்காங்கே கால்வாயில் தேங்கி உள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி, சில நாட்களாக மழை பெய்து வருவதால், மழைநீருடன் சேர்ந்து, கழிவுநீர் கலந்து தெருக்களில் தேங்கியுள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, காய்ச்சல் மற்றும் நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, மழைநீர் கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ள கால்வாயின் உயரத்தை குறைத்து, பழமத்துார் ஊராட்சியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் செய்யவும், தேசிய நெடுஞ் சாலைத் துறையினர் மற்றும் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.