/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரவுடிகளை ஒடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் தடாலடி! :வங்கி கணக்கு, சொத்து விபரங்களும் சேகரிப்பு
/
ரவுடிகளை ஒடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் தடாலடி! :வங்கி கணக்கு, சொத்து விபரங்களும் சேகரிப்பு
ரவுடிகளை ஒடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் தடாலடி! :வங்கி கணக்கு, சொத்து விபரங்களும் சேகரிப்பு
ரவுடிகளை ஒடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் தடாலடி! :வங்கி கணக்கு, சொத்து விபரங்களும் சேகரிப்பு
ADDED : ஆக 02, 2024 02:46 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்த, துப்பாக்கி ஏந்திய போலீசார், குழு அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரவுடிகளின் வங்கி கணக்கு மற்றும் சொத்து விபரங்களை சேகரிக்கும் பணியிலும், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணை கண்காணிப்பாளர்கள் அலுவலகங்கள் மற்றும் 20 காவல் நிலையங்கள் உள்ளன.
சென்னை புறநகர் பகுதிகளான மறைமலை நகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி ஆகிய பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திருப்போரூர் பகுதியிலும் தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதிகளில், தனியார் ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்படுகிறது.
இப்பகுதி ரியல் எஸ்டேட் தொழிலில், ரவுடிகளின் துணையோடு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டும் இன்றி, தனியார் தொழிற்சாலைகளில், இரும்புக் கழிவுகளை வாங்கி விற்பனை செய்யும் பணியில், ரவுடிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், ரவுடிகளுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, கொலையில் முடிவது வழக்கமாகி விட்டது.
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில், ஊரப்பாக்கம் அடுத்த அய்யஞ்சேரி ரவுடி லோகேஷ், 30, என்பவரை நாட்டு வெடிகுண்டி வீசி கொலை செய்துவிட்டு, மர்ம கும்பல் தப்பியது. இதைத்தொடர்ந்து, ரவுடிகளை கட்டுப்படுத்த, துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட, எஸ்.பி., சாய் பிரணீத் உத்தரவிட்டார்.
அதன்பின், தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில், ஏ - பிளஸ் ரவுடி கும்பல் தலைவர்கள் 20 பேர் உட்பட 42 ரவுடிகள், ஏ - பிரிவு ரவுடிகள் 267, பி - பிரிவு ரவுடிகள் 125 உள்ளிட்ட 454 ரவுடிகள் உள்ளனர்.
இவர்களை கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளை கண்காணிக்கும் போலீசார், தினமும் அவர்கள் வீடுகளுக்கு சென்று, சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி, ரவுடிகளின் குடும்ப பின்னணி, வெளிமாவட்ட ரவுடிகளுடனான தொடர்பு மற்றும் வங்கி கணக்கு மற்றும் சொத்து விபரங்கள் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி முடிந்தவுடன், வங்கி கணக்கு மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட உள்ளன.
சில மாதங்களுக்கு முன், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த ரவுடி தணிகாசலம், செங்கல்பட்டு ரவுடி சிவபிரகாசம் ஆகியோர், போலீசாரை தாக்கி தப்பிச்சென்ற போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த ரவுடியான சத்யா என்கிற சீர்காழி சத்யா, 41, நண்பர் வக்கீல் அலெக்ஸ் சுதாகர், 49, என்பவரின் பிறந்த நாள் விழாவை கொண்டாட வந்தபோது, செங்கல்பட்டு பழவேலி பகுதியில், கடந்த ஜூன் 28ம் தேதி போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.
கடந்த மாதம், போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடிகள் அன்வர், விஜய் என்கிற காவூர் விஜய், மாதவன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதன்பின், ரவுடிகள் மற்றும் வெளிமாவட்ட ரவுடிகளை கண்காணிக்க, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தலா இரண்டு துப்பாக்கி ஏந்திய போலீசார், இருசக்கர வாகனங்களில், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம், சூணாம்பேடு, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, ரவுடிகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் ரவுடிகளை கண்காணிக்கும் போலீசார், தினமும், எஸ்.பி., செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி.,க்களிடம், ரவுடிகளின் செயல்பாடுகளை பற்றி தினசரி தகவல் தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -