/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரியில் சாலை அமைத்து ஆக்கிரமிப்பு பொதுப்பணி துறை அதிரடி அகற்றம்
/
ஏரியில் சாலை அமைத்து ஆக்கிரமிப்பு பொதுப்பணி துறை அதிரடி அகற்றம்
ஏரியில் சாலை அமைத்து ஆக்கிரமிப்பு பொதுப்பணி துறை அதிரடி அகற்றம்
ஏரியில் சாலை அமைத்து ஆக்கிரமிப்பு பொதுப்பணி துறை அதிரடி அகற்றம்
ADDED : அக் 16, 2025 12:51 AM

திருக்கழுக்குன்றம்: விவசாய நிலத்தை வீட்டுமனையாக மாற்றுவதற்காக, திருக்கழுக்குன்றம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில், தனி நபர் அமைத்த சாலையை, பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.
திருக்கழுக்குன்றத்தில் மாதுளங்குப்பம் பகுதி உள்ளது. இப்பகுதி பொதுப் பணித்துறை பெரிய ஏரியை ஒட்டி அமைந்துள்ளது.
அப்பகுதியினர் நீண்டகாலமாக, ஏரிக்கரையில் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் சென்றனர். மழைக்காலத்தில் பாதை சகதியாக மாறி, அதன் வழியே கடக்க இயலாமல் சிரமப்பட்டனர்.
குற்றச்சாட்டு ஏரிக்கரை மண் பாதையில் சாலை அமைக்குமாறு, மக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம், 10 ஆண்டுகளுக்கு முன், தார்சாலை, உபரி நீர் வெளியேறும் கலங்கல் பகுதியில் கான்கிரீட் பாலம் என அமைத்தது.
இந்நிலையில், தேசுமுகிப்பேட்டையில், செங்கல்பட்டு சாலை, தண்ணீர்பந்தல் பேருந்து நிறுத்த பகுதியிலிருந்து, மாதுளங்குப்பம் பகுதிக்கு செல்ல, ஏரியின் குறுக்கில் தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, ஏரியை பிளவுபடுத்தி சாலை அமைப்பதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
மாதுளங்குப்பம் பகுதியில் உள்ள பலரது விவசாய நிலத்தை, வீட்டுமனையாக மாற்ற, பல ஆண்டுகளுக்கு முன் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஏரிக்கரையின் மீதான குறுகிய சாலை, புதிதாக அமையும் வீட்டுமனைக்கேற்ற சாலையாக இருக்காது.
எனவே, தண்ணீர்பந்தல் பஸ் நிறுத்த பகுதியிலிருந்து, மாதுளங்குப்பம் பகுதிக்கு எளிதாக செல்ல கருதி, ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியின் குறுக்கில் பாதை அமைக்கும் முயற்சியும், அப்போதே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அப்பணி தடுக்கப்பட்டது. மாதுளங்குப்பத்தில், திருக்கழுக்குன்றம் தி.மு.க., பிரமுகருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளதாக கூறப் படுகிறது.
இந்நிலத்தை வீட்டு மனையாக மாற்ற, தற்போது முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், முன் திட்டமிடப்பட்ட ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில், தற்போது கட்டுமான கழிவுகள், கிராவல் மண் என குவித்து, பாதை ஏற்படுத்தப்பட்டு வந்தது.
விவசாயிகள் மனு ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து அமைக்கும் பாதையால், ஏரி பகுதி இரண்டாக பிளவுபட்டு, ஏரிக்கு நீர் வரத்து குறைவு, விவசாய பாதிப்பு, புதிய பாதையை ஒட்டி நாளடைவில் ஆக்கிரமிப்பு குடியிருப்பு உருவாக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என, கருதி, பாதையை அகற்ற கோரி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறையினரிடம், விவசாயிகள் மனு அளித்தனர்.
திருக்கழுக்குன்றம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சேதுராணி, அப்பகுதியை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, நேற்று, நீர்ப்பிடிப்பு பகுதி துவங்கும் செங்கல்பட்டு சாலை பகுதியிலிருந்து, 250 மீ., துாரம் வரை, பொக்லைன் இயந்திரம் மூலம் பாதை பகுதியை அகற்றி, பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் பள்ளம் ஏற்படுத்தினர்.