/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்ட விவசாயிகள் 6,381 பேருக்கு...நிவாரணம்!: மூழ்கிய 9,259 ஏக்கர் பயிருக்கு 6.23 கோடி ஒதுக்கீடு
/
செங்கை மாவட்ட விவசாயிகள் 6,381 பேருக்கு...நிவாரணம்!: மூழ்கிய 9,259 ஏக்கர் பயிருக்கு 6.23 கோடி ஒதுக்கீடு
செங்கை மாவட்ட விவசாயிகள் 6,381 பேருக்கு...நிவாரணம்!: மூழ்கிய 9,259 ஏக்கர் பயிருக்கு 6.23 கோடி ஒதுக்கீடு
செங்கை மாவட்ட விவசாயிகள் 6,381 பேருக்கு...நிவாரணம்!: மூழ்கிய 9,259 ஏக்கர் பயிருக்கு 6.23 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜன 21, 2025 06:34 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, 9,259 ஏக்கர் நெற்பயிர் நாசமானது. இதில் பாதிக்கப்பட்ட, 6,381 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க, 6.23 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில், விவசாயம் மேற்கோள்ளப்படுகிறது.
மாவட்டத்தில், 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் கிணறு, ஆழ்துளைக் கிணறு நீர் மற்றும் ஏரி தண்ணீர் வாயிலாக சம்பா பருவம், நவரை பருவம், சொர்ணவாரி பருவங்களில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. மற்ற தாலுகாக்களில், குறைவான அளவில் விவசாயம் நடக்கிறது.
இந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவம், நவரை பருவங்களில், விவசாய நிலங்களில், 10,000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி சாகுபடி செய்தனர்.
கடந்த 2023ம் ஆண்டு, தென்மேற்கு பருவ மழையின் போது கன மழை பெய்ததில், எட்டு தாலுகாக்களில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.
நெல் பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியில், வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். இதில், 408 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதை கண்டறிந்தனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், காலம் தவறி பெய்த மழையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி, பாதிப்பு ஏற்பட்டது.
பாதிப்பு குறித்து வேளாண்மைத் துறையினர் கணக்கெடுப்பு செய்ததில், 8,851 ஏக்கர் நெல்பயிர் நீரில் மூழ்கியதை கண்டறிந்தனர்.
அதன் பின், விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க, கலெக்டர் அருண்ராஜ் பரிந்துரையின்படி, வேளாண்மைத் துறையினர், அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர்.
ஆனால், இழப்பீடு வழங்க காலதாமதம் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென, கலெக்டர் மற்றும் அரசிடம், தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் பின், விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க, அரசுக்கு கலெக்டர் கருத்துரு அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, 2023ம் ஆண்டு தென்மேற்கு பருவ மழையில், 408 ஏக்கர் நெல்பயிர் மூழ்கி நாசமானதற்கு இழப்பீடாக, பாதிக்கப்பட்ட, 242 விவசாயிகளுக்கு, 22 லட்சத்து 7 ஆயிரத்து 898 ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கடந்தாண்டு ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையில், 8,851 ஏக்கர் நெல்பயிர் பாதிக்கப்பட்டது. இதற்கு, 6,339 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, 6 கோடியே ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 208 ரூபாயை, கடந்த டிச., 31ம் தேதி, அரசு ஒதுக்கீடு செய்தது.
மாவட்டத்திற்கு நிதி கிடைத்ததும், விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என, வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 2023ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காலம் தவறி பெய்த மழையால், மொத்தம் 9,259 ஏக்கர் நெற்பயிர் நாசமானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 6,381 பேருக்கு, 6 கோடியே 23 லட்சம் ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகள் வங்கி கணக்குகளுக்கு, இழப்பீடு தொகை வரவு வைக்கப்படும்.
- அருண்ராஜ்,
கலெக்டர், செங்கல்பட்டு.