/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பீர்க்கன்காரணை ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றம்
/
பீர்க்கன்காரணை ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றம்
ADDED : நவ 13, 2024 10:28 PM

பெருங்களத்துார்:புதுபெருங்களத்துாரில், ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, பீர்க்கன்காரணை ஏரி உள்ளது.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன. எஞ்சியுள்ள பகுதியை, பொதுப்பணித் துறையினர் முறையாக பராமரிப்பதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன், கரையை பலப்படுத்தினர். தற்போது, பல இடங்களில், கரை சேதமடைந்துவிட்டது.
அதேநேரத்தில், ஏரியில் கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசடைந்துவிட்டது. மற்றொரு புறம், முழுவதும் ஆகாய தாமரை வளர்ந்து, ஏரி இருப்பதே தெரியவில்லை.
ஏரிகளை ஆய்வு செய்து, சீரமைக்க வேண்டிய பொதுப்பணித் துறையினரோ, எட்டிக்கூட பார்ப்பதில்லை எனவும், ஆகாயத்தாமரையை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் எனவும், கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெற்று, 25 லட்சம் ரூபாய் செலவில், ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில், மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
மூன்று மிதக்கும் பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக, இப்பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்தில் முடியும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.