/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆரம்ப சுகாதார நிலைய புது கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
/
ஆரம்ப சுகாதார நிலைய புது கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
ஆரம்ப சுகாதார நிலைய புது கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
ஆரம்ப சுகாதார நிலைய புது கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
ADDED : நவ 06, 2025 11:50 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில், புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில், வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது.
போதிய இட வசதி இல்லாததால் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, அய்யனார் கோவில் சந்திப்பு பகுதியில், புதிதாக வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் இடித்து அகற்றப்பட்ட இடத்தில், 15வது நிதி குழு மானியம் -சுகாதார திட்டத்தின் கீழ், 420 சதுர மீட்டர் பரப்பளவில், 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டுவதற்கான பணி, கடந்த 2023 டிசம்பரில் துவக்கப்பட்டது.
'9 மாதங்கள் காலக்கெடுவுக்குள் அனைத்து பணிகளும் முடிவுற்று, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், கட்டட பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும்' என, மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், கட்டுமான பணிகள் தாமதமாக நடந்து வந்தன.
தற்போது, கடந்த சில மாதங்களுக்கு முன், கட்டட பணிகள் முழுமையாக முடிந்துள்ளன.
சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சுகாதார நிலையம், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

