/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தென்மாவட்ட பயணியர் சென்னைக்குள் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
/
தென்மாவட்ட பயணியர் சென்னைக்குள் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
தென்மாவட்ட பயணியர் சென்னைக்குள் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
தென்மாவட்ட பயணியர் சென்னைக்குள் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
ADDED : ஏப் 14, 2025 11:44 PM

கிளாம்பாக்கம், தொடர் விடுமுறையை முன்னிட்டு, பேருந்துகளில் சொந்த ஊர் சென்ற 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர், மீண்டும் அரசு பேருந்துகள் வாயிலாக சென்னை திரும்புவர். இதனால், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னை மாநகரின் அனைத்து இடங்களுக்கும், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பயணியர் கூறியதாவது:
'தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட அரசு பேருந்துகள், கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயங்கும்' என, கடந்த மார்ச் 2ம் தேதி, தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பு, கடந்த மார்ச் 4ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதனால், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன.
ஆனால், கிளாம்பாக்கத்தில் இறங்கும் பயணியர் பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார், பாரிமுனை, வேளச்சேரி, திருவான்மியூர், வடபழனி, தாம்பரம் உள்ளிட்ட சென்னை மாநகரின் பிற பகுதிகளுக்கு பயணிக்க, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து போதிய எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால், பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர். கிளாம்பாக்கத்தில் இறங்கி உரிய இடங்களுக்குச் செல்ல, ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனத்தில், அதிக பணம் செலவழித்து, பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மார்ச் 4ம் தேதிக்குப் பின், தொடர் விடுமுறை நாட்கள் எதுவும் இல்லை. இதனால், வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்க, பயணியர் கூட்டமும் வழக்கம் போல் இருந்ததால், பெரிய சிக்கல் வரவில்லை.
கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூர் செல்ல, தினமும் 2,092 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு, கடந்த மூன்று விடுமுறை நாட்களில், 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.
அதன்படி, கடந்த மூன்று நாட்களில், அரசு பேருந்துகள் வாயிலாக வெளியூர் சென்ற 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர், இன்று அரசு பேருந்துகள் வாயிலாக மீண்டும் சென்னை திரும்புவர்.
அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், இவர்களை இறக்கிவிடும். அங்கிருந்து, சென்னை மாநகரின் அனைத்து இடங்களுக்கும் சிரமமின்றி இவர்கள் பயணிக்கும்படி, அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.