/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலம்பரைகுப்பம் சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
/
ஆலம்பரைகுப்பம் சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
ADDED : ஆக 31, 2025 02:02 AM
செய்யூர்:கடப்பாக்கம் - ஆலம்பரைகுப்பம் மாநில நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், ஆலம்பரைகுப்பம் கிராமத்திற்குச் செல்லும் 3 கி.மீ., தார்ச்சாலை உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த எட்டு கிராமங்களின் பிரதான சாலையாக உள்ளது.
கடப்பாக்கத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பேரூராட்சி அலுவலகம், மருத்துவமனை, மீன் மார்க்கெட், வங்கிகள் செயல்பட்டு வருவதால், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.
மேலும், கடப்பாக்கத்தில் உள்ள கடற்கரை மற்றும் ஆலம்பரை கோட்டையை சுற்றிப் பார்க்க, ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
ஆனால், தற்போது கடப்பாக்கம் - ஆலம்பரைகுப்பம் இடையே அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை, 10 அடி அகலம் மட்டுமே உள்ளதால் கார், வேன், பேருந்து ஆகியவை சென்று வர சிரமமாக உள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
கடப்பாக்கம் - ஆலம்பரைகுப்பம் சாலையில், முன்னே செல்லும் வாகனங்களை மற்ற வாகனங்கள் முந்த முயற்சிக்கும் போது, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென, 25 ஆண்டுகளாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, இந்த சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

