/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கம்மாளம்பூண்டியில் சாலை விரிவாக்க பணி
/
கம்மாளம்பூண்டியில் சாலை விரிவாக்க பணி
ADDED : நவ 17, 2025 07:52 AM

உத்திரமேரூர்: -கம்மாளம்பூண்டி சாலையில், 2.85 கோடி ரூபாய் மதிப்பில், விரிவாக்கப் பணிகள் நேற்று துவக்கப்பட்டன.
காஞ்சிபுரம் நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட, கம்மாளம்பூண்டியில், உத்திரமேரூர் -- அச்சிறுபாக்கம் சாலை செல்கிறது.
இந்த சாலையை பயன்படுத்தி எண்டத்துார், கோழியாளம், தீட்டாளம் ஆகிய பகுதி களைச் சேர்ந்தோர், உத்திரமேரூர், செங்கல்பட்டு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, ஸ்ரீபெரும்புதுார், மறைமலை நகர், ஒரகடம் சிப்காட்டுகளில் இயங்கும் பேருந்துகளும் இவ்வழியே செல்கின்றன.
கம்மாளம்பூண்டியில் செல்லும் இச்சாலை, போதிய இடவசதி இல்லாததால், அடிக்கடி வாகன நெரிசல், விபத்துகள் ஏற்பட்டு வந்தன.இதை தவிர்க்க, வாகன ஓட்டிகள் இச்சாலையை விரிவாக்கம் செய்ய, கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, கம்மாளம்பூண்டியில் இருந்து, தீட்டாளம் கூட்டுச் சாலை வரை, ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்திற்கு, 2.85 கோடி ரூபாய் செலவில், விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை யினர் தீர்மானித்தனர்.
இந்நிலையில், கம்மாளம் பூண்டியில் சாலையை, அகலப்படுத்தும் பணி நேற்று துவக்கப்பட்டது.
இதுகுறித்து உத்திரமேரூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கம்மாளம்பூண்டியில் இருந்து, தீட்டாளம் கூட்டுச்சாலை வரை, ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள், 2.85 கோடி ரூபாய் மதிப்பில் நேற்று துவக்கப்பட்டன. மூன்று மாதங்களில் சாலை விரிவாக்க பணிகள் முடிக்கப்படும்' என்றார்.

