/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரோம் நாட்டு செப்பு நாணயம் பாலாற்றில் கண்டெடுப்பு
/
ரோம் நாட்டு செப்பு நாணயம் பாலாற்றில் கண்டெடுப்பு
ADDED : நவ 28, 2024 02:48 AM

சென்னை, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி வரலாற்றியல் துறை விரிவுரையாளரும், வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலருமான மதுரைவீரன், செங்கல்பட்டு மாவட்டம், பாலாற்றில் கள ஆய்வு நடத்தினார். அப்போது, ரோம் நாட்டு நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
சங்க இலக்கியங்களில், ரோமானியர்களுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தது குறித்த செய்திகள் நிறைய உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், பாலாறு கடலில் கலக்கும் இடமாக கருதப்படும் வசுவசமுத்திரம் பகுதியில், தமிழக தொல்லியல் துறை, ஏற்கனவே அகழாய்வு செய்தது.
அதில், ரோமானிய மண்பாண்டங்கள், மணிகள் உள்ளிட்ட தொல் பொருட்கள் கிடைத்தன. இங்கிருந்த துறைமுகம் அழிக்கப்பட்டதாக, பெரும்பாணாற்றுப்படையில் குறிப்பு உள்ளது.
நான் தற்போது செய்த கள ஆய்வில், பொ.யு.பி., 306 - 337 ஆண்டு காலத்தில், ரோமை ஆண்ட கான்ஸ்டான்டைன் எனும் மன்னரின் உருவம் பொறித்த நாணயம் ஒன்றும், தெளிவற்ற நிலையில் மற்றொரு நாணயமும் கிடைத்துள்ளன.
இதிலிருந்து, பல்லவ மன்னர்களின் ஆட்சியில், இங்கு துறைமுகப்பட்டினம் சிறப்பாக இருந்ததையும், இங்கு ரோமானியர்கள் வணிகம் செய்ய வந்து, சென்றதையும் அறிய முடிகிறது.
இதுபோல், ஆறுகள் கடலில் கலக்கும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அகழாய்வு செய்தால், வரலாற்றுக்கு வலு சேர்க்கும் புதிய ஆதாரங்கள் கிடைக்கக்கூடும்.
கான்ஸ்டான்டைன் உருவம் பொறித்த வட்டவடிவ செப்பு நாணயத்தைப் பொறுத்தவரை, 1.64 கிராம் எடையும், 1.2 செ.மீ., விட்டமும், 2 மி.மீ., தடிமனும் உள்ளது. மற்றொரு நாணயம், 1.02 கிராம் எடையுடன் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.