/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூவம் ஆற்றில் கழிவுநீரை விடும் லாரிகளுக்கு ரூ.29,500 அபராதம்
/
கூவம் ஆற்றில் கழிவுநீரை விடும் லாரிகளுக்கு ரூ.29,500 அபராதம்
கூவம் ஆற்றில் கழிவுநீரை விடும் லாரிகளுக்கு ரூ.29,500 அபராதம்
கூவம் ஆற்றில் கழிவுநீரை விடும் லாரிகளுக்கு ரூ.29,500 அபராதம்
ADDED : செப் 25, 2024 06:22 AM

சென்னை, : கூவம் ஆற்றில் கழிவுநீரை விடும் லாரிகளுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன் 29,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
'டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், பகல் நேரத்திலேயே சென்னை முகப்பேர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் விடப்படுகிறது.
இதனால் கூவம் ஆறு கடுமையாக மாசடைந்து பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை பல நுாறு கோடி ரூபாய் செலவில், கூவம் ஆற்றை துாய்மைப்படுத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதில்லை' என, நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, இது குறித்து வழக்கு பதிந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. இப்பிரச்னையில், அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், தீர்ப்பாயத்தில் சென்னை குடிநீர் வாரியம் தாக்கல் செய்த அறிக்கை:
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை சட்டவிரோதமாக, சென்னை, முகப்பேர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் விட்ட டேங்கர் லாரி, திருமங்கலம் காவல் நிலையத்தாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அண்ணா நகரில் இருந்து ஆழ்துளை கிணறு கசடுகள் அந்த லாரியில் கொண்டு வரப்பட்டு, கூவம் ஆற்றில் கொட்டப்பட்டது தெரிய வந்தது.
செப்டிக் டேங்க் கழிவுகள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை, சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அதற்கென அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர வேறு இடங்களில், குறிப்பாக நீர்நிலைகளில் விட்டால் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதன்படி முகப்பேர் பாலத்தில் பிடிப்பட்ட லாரியின் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம், 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி 4,500 ரூபாய் சேர்த்து, 29,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. லாரி உரிமையாளர் மன்னிப்பு கடிதம் கொடுத்து, அபராதம் செலுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவுகளை, 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, பதிவு செய்து அகற்ற வேண்டும்.
வானகரம், அயனப்பாக்கம், அம்பத்துார், நுாம்பல், முகப்பேர், நெற்குன்றம், காட்டுப்பாக்கம், நொளம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து, முகப்பேர் கழிவுநீர் உந்து நிலையத்திற்கு கழிவுநீரை கொண்டு செல்ல, 31 லாரிகள் பயன்பாட்டில் உள்ளன.
இதையும் மீறி நீர்நிலைகளில், பொது இடங்களில் கழிவுநீர் விடப்படும் லாரிகள் 'சிசிடிவி' கேமரா வாயிலாக கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏரியில் கழிவுநீர் வாகனங்கள் வாயிலாக, கழிவுநீர் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அகற்றப்படும் கழிவுநீர், ஏரியின் மறைவான பகுதியில் கொட்டப்படுகிறது.
மேலும், இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவற்றின் செப்டிக் டேங்குகளில் தேக்கமடையும் கழிவுநீரும், வாகனங்கள் வாயிலாக ஏரியில் கொட்டப்படுகிறது.
எனவே, ஏரியின் கரையோரம் கழிவு நீரை தினந்தோறும் கொட்டி வரும் தனியார் கழிவுநீர் வாகனங்களை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.