/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் கடலுக்கு அடியில் பழங்கால கட்டுமான சிதைவுகள் ஒரு படம் மட்டும்
/
மாமல்லபுரம் கடலுக்கு அடியில் பழங்கால கட்டுமான சிதைவுகள் ஒரு படம் மட்டும்
மாமல்லபுரம் கடலுக்கு அடியில் பழங்கால கட்டுமான சிதைவுகள் ஒரு படம் மட்டும்
மாமல்லபுரம் கடலுக்கு அடியில் பழங்கால கட்டுமான சிதைவுகள் ஒரு படம் மட்டும்
ADDED : ஆக 17, 2025 01:14 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் கடலில் மூழ்கியுள்ள பழங்கால கோவில் கட்டுமான அடையாளங்களை ஆவணப்படுத்த, தொல்லியல் துறையினர் கடலில் ஆய்வு நடத்தியதில், பழங்கால கட்டுமான சிதைவுகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். கி.பி.7 ம்- 8ம் நுாற்றாண்டுகளில், காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த, பல்லவர்களின் துறைமுகபட்டின பகுதியாக மாமல்லபுரம் விளங்கியது.
மாமல்லபுரத்தில் உள்ள பாறைகுன்றுகளில், அவர்கள் பலவகை சிற்பக்கலைகள் படைத்தனர். அவர்கள் கோவில் கட்டுமானமாக உருவாக்கிய கடற்கரை கோவில் பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னம்.
இக்கோவில் சைவ, வைணவ சன்னிதிகளுடன் உள்ளது. அதன் கிழக்கில் மேலும் சில கோவில்கள் அமைந்து, அவை கடல் சூழ்ந்து மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், தொல்லியல் துறையின் நீருக்கு அடியில் ஆய்வுசெய்யும் பிரிவினர், கடந்த 2001ல், கோவிலின் கிழக்கு பகுதி கடலில் ஆய்வு செய்து, பாறைகள் இருப்பதை கண்டறிந்தனர். 2004ல் ஏற்பட்ட சுனாமி தாக்குதலின்போது, கடலில் உள்ள பாறைகள் வெளிப்பட்டன.
அப்பாறைகளில் பழங்கால கட்டுமானங்கள் உள்ளனவா என, 2005ல் ஆய்வுசெய்து, பாறைகல்லான சுவர் போன்ற அமைப்பு, சிதிலமடைந்த கலையம்ச வேலைப்பாடுகள் இருப்பதை கண்டறிந்தனர். அவற்றின் தன்மை, துல்லியம் குறித்து அறிய இயலவில்லை.
இந்நிலையில், தற்கால நவீன படபிடிப்பு சாதனம் வாயிலாக, கடலில் மூழ்கிய கட்டுமான சிதைவுகளை துல்லியமாக படம் பிடித்து, ஆவணப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, அத்துறையின் கூடுதல் இயக்குனர் அலோக் திரிபாதி, பிரிவு தலைவர் அப்ரஜிதா சர்மா உள்ளிட்ட குழுவினர், ஆர்.ஓ.வி., எனப்படும் 'ரிமோட்லி ஆபரேட்டட் வெகிள்' என்ற நவீன சாதனம் வாயிலாக, கடந்த இரண்டு நாட்களாக, கடலில் ஆய்வு நடத்தினர்.
இதுகுறித்து, அலோக் திரிபாதி கூறியதாவது:
கடற்கரை கோவிலுக்கு கிழக்கில், ஒரு கி.மீ., தொலைவில், 6 மீ., - 7 மீ., ஆழத்தில், நீருக்கு அடியில் இருப்பதை மிகவும் துல்லியமாக ஆராயும் ஆர்.ஓ.வி., சாதனம் வாயிலாக ஆய்வு நடத்தினோம். கோவில் கட்டுமான சிதைவுகள் இருப்பதை உறுதி செய்துள்ளோம். தொடர் ஆய்வு மேற்கொள்வோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

