/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கலெக்டர் அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள் முற்றுகை
/
செங்கை கலெக்டர் அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள் முற்றுகை
செங்கை கலெக்டர் அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள் முற்றுகை
செங்கை கலெக்டர் அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள் முற்றுகை
ADDED : அக் 09, 2024 10:51 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி தனியார் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறைமலை நகர் நகராட்சியில், தனியார் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், துாய்மை பணியாளர்களுக்கு தர வேண்டிய பாதுகாப்பு உபணரங்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்கவில்லை.
நகராட்சி நிர்வாகம் வழங்கும் சம்பளத்தை முழுமையாக வழங்கவும், சம்பளத்திற்கான ரசீது வழங்கவும் வேண்டும். மழைக்காலங்களில், கோட், நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை, பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் ஆகியவற்றை செய்ய வேண்டும்.
மாதத்தில் நான்கு நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும். போனஸ் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரிடம் மனு கொடுக்க நேற்று திரண்டனர். அதன்பின், திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மறைமலை நகர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், போராட்டம் நடத்தியவர்களிடம் பேசினார். அப்போது, கோரிக்கைகள் குறித்து கமிஷனரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதன்பின், முற்றுகையில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.