/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் தேங்கும் கழிவுநீர் கொண்டமங்கலத்தில் சீர்கேடு
/
சாலையில் தேங்கும் கழிவுநீர் கொண்டமங்கலத்தில் சீர்கேடு
சாலையில் தேங்கும் கழிவுநீர் கொண்டமங்கலத்தில் சீர்கேடு
சாலையில் தேங்கும் கழிவுநீர் கொண்டமங்கலத்தில் சீர்கேடு
ADDED : டிச 23, 2024 01:43 AM

மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் கோவிந்தாபுரம் -- அனுமந்தபுரம் செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையில் பல இடங்களில், பெரிய பள்ளங்கள் உள்ளன. சாலையின் இருபுறமும் மழைநீர் செல்ல வழி இல்லாததால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இதில் கலந்து, துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இந்த பகுதியில் சாலை பெயர்ந்து பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைநீர் செல்லும் கால்வாயை பலர் ஆக்கிரமிப்பு செய்து, மாட்டு சாணம் கொட்டியுள்ளனர். இதனால், தண்ணீர் வெளியேற முடியாமல் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்குகிறது.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீரோடு கலந்து, வீடுகளை சூழ்ந்து உள்ளது. மேலும் இந்த கால்வாய்க்கு அடியில் மின்வாரிய அதிகாரிகள் அமைத்த மின் வடம் வாயிலாக, மின்சாரம் செல்கிறது. எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இங்கு கொசுக்கள் அதிக அளவில் உள்ளதால், கிராம மக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் தேங்குவது குறித்து பலமுறை காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து, சாலையின் எல்லைகளை அளவீடு செய்து புதிய சாலை அமைக்கவும், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவற்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.