/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் நகரில் அதிவேக கனரக வாகனங்கள் தடை விதிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
/
திருப்போரூர் நகரில் அதிவேக கனரக வாகனங்கள் தடை விதிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
திருப்போரூர் நகரில் அதிவேக கனரக வாகனங்கள் தடை விதிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
திருப்போரூர் நகரில் அதிவேக கனரக வாகனங்கள் தடை விதிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 05, 2025 02:10 AM

திருப்போரூர்:திருப்போரூர் நகருக்குள், பகல் நேரங்களில் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுவதால், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகர் பகுதியிலுள்ள ஓ.எம்.ஆர்., சாலை வழியாக தினமும், ஏராளமான கனரக வாகனங்கள், லாரிகள், தனியார் நிறுவன பேருந்துகள், வேன்கள் சென்று வருகின்றன.
இதன் காரணமாக, இச்சாலையில் திருப்போரூர் ரவுண்டானா முதல் இள்ளலுார் இணைப்பு சாலை வரை, எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, திருப்போரூரில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், புறவழிச்சாலை இருந்தும், ஏராளமான கனரக வாகனங்கள், பழையபடி நகருக்குள் பயணித்து வருகின்றன.
பொதுமக்கள் நலன் கருதியும், விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், திருப்போரூர் நகருக்குள் காலை, 6:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை கனரக வாகனங்கள், தனியார் நிறுவன பேருந்துகள், வேன்கள் செல்ல, திருப்போரூர் போலீசார் தடை விதித்தனர்.
இதனால் காலை, மாலை நேரங்களில், திருப்போரூரில் போக்கு வரத்து நெரிசல் சற்று குறைந்து இருந்தது.
தற்போது மீண்டும், பழைய நிலையிலேயே காலை முதல் அனைத்து நேரங்களிலும், கனரக வாகனங்கள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள், திருப்போரூர் நகருக்குள் அதிக அளவில் செல்கின்றன. இதனால், சில நேரங்களில் நகரவே முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, திருப்போரூர் நகருக்குள் பகல் நேரங்களில் செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த, போலீசார் மீண்டும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.