/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : டிச 03, 2024 06:14 AM

செங்கல்பட்டு : 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கிய நெற்பயிர்களை, கண்காணிப்பு அலுவலர் கேரல் ஜோன்யா மரியம் சாமுவேல், நேற்று ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா பருவத்திற்கான நடவு பணிகள் முடிந்து, நவரை பருவத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கன மழையால், மாவட்டத்தின் எட்டு தாலுகாவிலும், 10,000 ஏக்கருக்கும் மேல் பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
நீரில் மூழ்கியுள்ள பயிர்கள் மற்றும் பாதிப்படைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில், வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், செய்யூர் ஆகிய தாலுகாவில், புயலால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை, கண்காணிப்பு அலுவலர் கேரல் ஜோன்யா மரியம் சாமுவேல், நேற்று ஆய்வு செய்தார்.
வேளாண்மை இணை இயக்குனர் பிரேம் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அப்போது, விவசாயிகள் பின்பற்ற வேண்டியது குறித்து, பிரேம் சாந்தி கூறியதாவது:
மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் பயிர் இழப்பை தடுக்க, உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி, நீரை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க செய்ய வேண்டும்.
வடிகட்டப்படும் நீரை வீணாக்காமல், அதை பண்ணை குட்டைகள், தாழ்வான பகுதிகளில் சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் மீண்டும் பயன்படுத்தலாம். இதனால், நிலத்தின் நீர்மட்டம் உயரும்.
அதிக மழையால், மண்ணிலிருந்து அடித்துச் செல்லப்படும் நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சத்துக்களை ஈடு செய்ய, பரிந்துரைக்கப்பட்டதை விட 25 சதவீதம் கூடுதல் அளவு யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை மேல் உரமாக இடுதல் வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், யூரியா மற்றும் நுண்ணுாட்ட சத்துக்களை இலை வழி தெளிக்க வேண்டும்.
பருவ மழையால் பாதிக்கப்பட்ட இளம் பயிர்களை பாதுகாக்க, மழை நின்றவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, ஒரு கிலோ 'ஜிங்க் சல்பேடினை' 200 லிட்டர் நீரில் கலந்து, ஒரு இரவு முழுதும் ஊற வைத்து, கைதெளிப்பான் வாயிலாக பயிரின் இலைகளில் படும்படியாக தெளிக்க வேண்டும்.
பூக்கும் தறுவாயில் உள்ள பயிர்களுக்கு வயலில் தண்ணீர் வடிந்தவுடன், ஒரு ஏக்கருக்கு மேல் உரமாக, 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுதும் வைத்து, மறுநாள் 17 கிலோ பொட்டாஷ் உடன் வயலில் இடுவதன் மூலம், ஊட்டச்சத்து குறைப்பாட்டை தவிர்க்கலாம்.
பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் குறித்து, கண்காணிக்க வேண்டும்.
பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் போகும் போது, வேம்பு சார்ந்த மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.
விவசாயிகள் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆலோசனை பெற, அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.