/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதல்வருக்காக சீரமைக்கப்பட்ட சாலை மீண்டும் நாசமானதால் கடும் அதிருப்தி
/
முதல்வருக்காக சீரமைக்கப்பட்ட சாலை மீண்டும் நாசமானதால் கடும் அதிருப்தி
முதல்வருக்காக சீரமைக்கப்பட்ட சாலை மீண்டும் நாசமானதால் கடும் அதிருப்தி
முதல்வருக்காக சீரமைக்கப்பட்ட சாலை மீண்டும் நாசமானதால் கடும் அதிருப்தி
ADDED : டிச 04, 2025 02:42 AM

திருப்போரூர்: திருப்போரூர் - இள்ளலுார் சாலை சந்திப்பு பகுதியில், முதல்வர் வருகைக்காக அமைக்கப்பட்ட சாலை மீண்டும் நாசமான நிலையில், தரமான சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் - ஓ.எம்.ஆர்., சாலையிலிருந்து, இள்ளலுார் சாலை பிரிந்து செல்கிறது.இதன் வழியாக வெண்பேடு, காட்டூர், அம்மாபேட்டை, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும், இள்ளலுார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் லாரிகள் மூலமாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
தற்போது, இள்ளலுார் சாலை சந்திப்பில், சாலை கடுமையாக சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இள்ளலுாரில் உள்ள 'சென்னை வொண்டர்லா' என்ற பொழுதுபோக்கு மையத்தை, கடந்த 1ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வந்து திறப்பதாக இருந்தது.
மழை காரணமாக அன்று காலை, திடீரென பயணம் ரத்து செய்யப்பட்டு, காணொலி வாயிலாக சென்னையிலிருந்து திறந்து வைத்தார். முன்னதாக, முதல்வர் வரும் சூழல் இருந்த நிலையில், மேற்கண்ட திருப்போரூர் - இள்ளலுார் சாலை சந்திப்பு பகுதியில், தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டது.
மேலும், இந்த சந்திப்பு சாலையிலிருந்து வொண்டர்லா அமைந்திருக்கும் பகுதி வரை, சாலை இருபுறமும் முட்செடிகள் அகற்றப்பட்டு, அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டது.
இதில், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை - இள்ளலுார் சாலை சந்திப்பில் சீரமைக்கப்பட்ட இடத்தில், மழை காரணமாக மீண்டும் சேதமடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி, வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
எனவே, மேற்கண்ட சாலை சந்திப்பு பகுதியில் தரமான சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

