/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் குழாயுடன் மின்வடம் புதைப்பு திருப்போரூர் அருகே கடும் எதிர்ப்பு
/
குடிநீர் குழாயுடன் மின்வடம் புதைப்பு திருப்போரூர் அருகே கடும் எதிர்ப்பு
குடிநீர் குழாயுடன் மின்வடம் புதைப்பு திருப்போரூர் அருகே கடும் எதிர்ப்பு
குடிநீர் குழாயுடன் மின்வடம் புதைப்பு திருப்போரூர் அருகே கடும் எதிர்ப்பு
ADDED : ஜூன் 27, 2025 12:56 AM

திருப்போரூர்:வடநெம்மேலி ஊராட்சியில் கட்டப்படும் தனியார் குடியிருப்புக்கு, குடிநீர் குழாயுடன் உயர் மின்னழுத்த வடம் புதைத்து உள்ளதற்கு, பகுதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், இ.சி.ஆர்., சாலை, வடநெம்மேலி ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதி மாதாகோவில் முதல் தெருவில், மின்மாற்றி உள்ளது.
இந்த மின்மாற்றியிலிருந்து 100 மீட்டர் துாரத்தில் தனியார் வில்லா குடியிருப்பு கட்டப்படுகிறது. அந்த குடியிருப்பில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்படுகின்றன.
இந்த வீடுகளுக்காக 100 மீட்டர் துாரத்திற்கு சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டி, உயர் மின்னழுத்த வடம் புதைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அதே பள்ளத்தில், அரசு பள்ளிக்கு குடிநீர் குழாய் இணைப்பு செல்கிறது.
அதை பொருட்படுத்தாமல், குடிநீர் குழாயுடன் உயர் மின்னழுத்த கேபிள் புதைக்கப்பட்டதற்கு, அப்பகுதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த மின்வடத்தை அகற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், மின்வாரிய உயரதிகாரிகள், அமைச்சர், முதல்வர் தனிப்பிரிவு என, பல்வேறு துறைகளுக்கு பகுதிவாசிகள் புகார் மனு அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
ஊராட்சி மன்ற தலைவரின் 'துணையோடு', பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மின்மாற்றியில் இருந்து, தனியார் குடியிருப்புக்கு, உயர் மின்னழுத்த வடம் புதைக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, சாலையும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பு இருந்தும், சட்ட விரோதமாக செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலை எதிர்புறம், தனியார் இடம் உள்ளது. அதில், யாருக்கும் இடையூறு இல்லாமல், மின்கேபிளை புதைத்து, இணைப்பு எடுத்துச் செல்லலாம். ஆனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், குடிநீர் குழாய் செல்லும் பள்ளத்தில் உயர் மின்னழுத்த வடம் புதைக்கப்பட்டுள்ளது.
மேலும், 50க்கும் மேற்பட்ட வீடுகளின் மழைநீர் வெளியேறும் வழிதடமாக இந்த பகுதி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.