/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலவாக்கம் அரசு பள்ளியில் சரியும் மாணவர்கள் சேர்க்கை
/
பாலவாக்கம் அரசு பள்ளியில் சரியும் மாணவர்கள் சேர்க்கை
பாலவாக்கம் அரசு பள்ளியில் சரியும் மாணவர்கள் சேர்க்கை
பாலவாக்கம் அரசு பள்ளியில் சரியும் மாணவர்கள் சேர்க்கை
ADDED : ஏப் 21, 2025 01:37 AM

பாலவாக்கம்:பாலவாக்கம் ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளி, சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. பள்ளியின் கழிப்பறை தாழ்வாக அமைக்கப்பட்டு உள்ளதால், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி, பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கிறது.
தவிர, ஆழ்துளை கிணற்றிலிருந்து கிடைக்கும் நீர், கடல்நீர் போல் உள்ளதால், அதை பயன்படுத்த இயலவில்லை. அதுமட்டுமின்றி, கட்டட சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளது.
வகுப்பறைகளில் தரை பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால், ஆசிரியர்கள் தங்கள் செலவில், கோரை பாய்களை விரித்து, அதன் மீது மாணவர்களை அமர வைத்துள்ளனர்.
இங்குள்ள சிறிய சமையலறையில் மின் விளக்கு பொருத்தப்படவில்லை. தவிர, ஜன்னலுக்கு கதவு இல்லாததால் எலி, கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகரித்து, உணவு பொருட்கள் வீணாகின்றன.
அதோடு, பள்ளி வளாகத்தில் உள்ள கைவிடப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இப்பள்ளியில், 10 ஆண்டுகளுக்கு முன், 500 மாணவர்கள் பயின்றனர். பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததால், மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து, கழிப்பறை, தண்ணீர் பிரச்னைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

