/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழாய் உடைந்து தேங்கும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதி
/
குழாய் உடைந்து தேங்கும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதி
குழாய் உடைந்து தேங்கும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதி
குழாய் உடைந்து தேங்கும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதி
ADDED : அக் 13, 2025 12:54 AM

சோழிங்கநல்லுார், அக். 13-
பிரதான குழாய் உடைந்து, அரைகுறையாக கட்டப்பட்ட கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கடியால் காரப்பாக்கம், அரசு பள்ளி மாணவ - மாணவியர் விடுப்பு எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, காரப்பாக்கம், கங்கையம்மன் கோவில் தெருவில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 280க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளியை ஒட்டி கட்டப்படும் வடிகால்வாய் பணி, அரைகுறையாக பாதியில் நிற்கிறது. கடந்த 15 நாட்களுக்கு முன், காரப்பாக்கத்தில் உள்ள பிரதான கழிவுநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டது. அதை சரி செய்யாமல், கழிவுநீரை வடிகால்வாயில் வடிய செய்துள்ளனர்.
இந்த கழிவுநீர், பள்ளியை ஒட்டி அரைகுறையாக நிற்கும் வடிகால்வாயில் நாள்கணக்கில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லை அதிகமாக உள்ளதால், மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
கதவை மூடி வைத்தும், பாடம் எடுக்க முடியாமல் திணறுகின்றனர். சில மாணவ - மாணவியர் சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாததால், அவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாணவ - மாணவியரின் பெற்றோர் கூறுகையில், 'துர்நாற்றம் வீசுவதால், வகுப்பறையில் அமர முடியவில்லை என, பிள்ளைகள் எங்களிடம் கூறினர். மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் முறையாக பதில் கூறவில்லை' என்றனர்.
பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, 'கழிவுநீரால் மாணவ - மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுவதாக, அதிகாரிகளிடம் பலமுறை கூறிவிட்டோம். நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். பல நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்றனர்.