/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு புறவழி சாலை ரூ.89 லட்சத்தில் சீரமைப்பு
/
சூணாம்பேடு புறவழி சாலை ரூ.89 லட்சத்தில் சீரமைப்பு
ADDED : நவ 28, 2024 02:30 AM
சூணாம்பேடு, சூணாம்பேடு அடுத்த ஆரவல்லி நகர் பகுதியில், திண்டிவனம் செல்லும் சாலையை இணைக்கும் 1.5 கி.மீ., நீள புறவழிச்சாலை உள்ளது. இச்சாலை ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
புதுப்பட்டு, விளாம்பட்டு, புதுக்குடி ஆகிய கிராமவாசிகள் பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளது. இச்சாலை, 10 ஆண்டுகளாக சேதடைந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருந்தது.
இதன் காரணமாக தினமும் பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்வோர் கடும் சிரமப்பட்டு வந்தனர். மேலும், இப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாய பணிக்கு செல்வோர் விபத்தில் சிக்கி வந்தனர்.
நான்கு மாதங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம், உப்புவேலுார் கிராமத்தைச் சேர்ந்த அமுதா 40, என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது, எதிரே வந்த லாரியின் பின்பக்க சக்கரம், அமுதாவின் தலையில் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வரும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 89 லட்சம் ரூபாயில், சாலை சீரமைக்கும் பணி சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
அடுத்த சில வாரங்களில் சாலை சீரமைப்பு பணி நிறைவு செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.