/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாவட்டத்தில் 1.65 லட்சம் டன் நெல் கொள்முதலுக்கு... இலக்கு! 118 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு
/
மாவட்டத்தில் 1.65 லட்சம் டன் நெல் கொள்முதலுக்கு... இலக்கு! 118 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு
மாவட்டத்தில் 1.65 லட்சம் டன் நெல் கொள்முதலுக்கு... இலக்கு! 118 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு
மாவட்டத்தில் 1.65 லட்சம் டன் நெல் கொள்முதலுக்கு... இலக்கு! 118 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு
ADDED : மார் 10, 2025 11:29 PM

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு வந்துள்ளதால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்காலிகமாக துவக்கப்பட்டு உள்ளன. விவசாயிகளிடம் 1.65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
மாவட்டத்தில், 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது; மற்ற பகுதிகளில் குறைவாக சாகுபடி செய்யப்படுகிறது.
உத்தரவு
சம்பா பருவத்தில் 67,685 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது. ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகளும் துவங்கியுள்ளன.
விவசாயிகளிடம் இருந்து, 1.65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், 2024- -- 25 பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
நெல் கொள்முதலில், சன்ன ரக நெல் குவின்டால் ஒன்றிற்கு 2,450 ரூபாயும், பொது ரக நெல் குவின்டால் ஒன்றிற்கு 2,405 ரூபாயும் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் 91 இடங்களிலும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு வாயிலாக 27 இடங்களிலும் என, மொத்தம் 118 இடங்களில் நேரடி தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு 50- முதல் 60 ரூபாய் வரை தனியாக பணம் கேட்பதாக, விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.
இதையடுத்து, இது குறித்து நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித முறைகேட்டிற்கும் இடமளிக்காத வகையில் பணிபுரிய வேண்டும்.
விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ள பரப்பளவிற்கு, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சிட்டா, அடங்கல் பெற்று, கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
நடவடிக்கை
பதிவு மூப்பு அடிப்படையில், தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யலாம்.
குறைபாடு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் தனிநபர்கள் ஆதிக்கம் செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது குற்றவியல்நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முறைகேடுகள் தொடர்பான புகார்களுக்கு, 044 - 2742 7412, 044 - 2742 7414 என்ற கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
அதேபோல, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன், சம்பந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க, முதுநிலை மண்டலமேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

