/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கட்டடம் சேதமாகி மாமல்லை சிற்பக்கலை கல்லுாரி...சீர்குலைவு!:66 பணியிடத்தில் 6 பேரே உள்ளதால் மாணவர்கள் அவதி
/
கட்டடம் சேதமாகி மாமல்லை சிற்பக்கலை கல்லுாரி...சீர்குலைவு!:66 பணியிடத்தில் 6 பேரே உள்ளதால் மாணவர்கள் அவதி
கட்டடம் சேதமாகி மாமல்லை சிற்பக்கலை கல்லுாரி...சீர்குலைவு!:66 பணியிடத்தில் 6 பேரே உள்ளதால் மாணவர்கள் அவதி
கட்டடம் சேதமாகி மாமல்லை சிற்பக்கலை கல்லுாரி...சீர்குலைவு!:66 பணியிடத்தில் 6 பேரே உள்ளதால் மாணவர்கள் அவதி
ADDED : ஜன 08, 2025 10:29 PM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அரசு கட்டடக்கலை, சிற்பக்கலை கல்லுாரியில், 50க்கும் மேற்பட்ட விரிவுரையாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள், நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளன. மேலும், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், பழமையான கட்டடங்கள் சீர்குலைந்து உள்ளதால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, ஆசியாவின் ஒரே மரபு கலைக் கல்லுாரியை மேம்படுத்த வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள பாறைக் குன்றுகளில் பல்லவர்கள் கற்றளி, புடைப்பு, குடவரை, கோவில் கட்டுமானம் என, சிற்பக் கலைகள் படைத்துள்ளனர்.
இக்கலைகள் தோன்றிய இங்கு தமிழக கலை, பண்பாட்டுத் துறையின், அரசு கட்டடக்கலை, சிற்பக்கலை கல்லுாரி இயங்குகிறது. பாரம்பரிய மரபு கலைகளை பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் பயிற்றுவிக்கவும் கருதி, தமிழக தொழில், வணிக துறையின் கீழ், கடந்த 1957ல், சிற்ப பயிற்சியகம் முதலில் துவக்கப்பட்டது.
துவக்கத்தில் எழுதவும், வாசிக்கவும் தெரிந்தவர்களுக்கு, நான்காண்டு சான்றிதழ் படிப்பு பயிற்றுவிக்கப்பட்டது.
நாளடைவில், தொழில்நுட்ப கல்வித்துறைக்கு மாற்றப்பட்டு, அரசு கட்டடக்கலை, சிற்பக்கலைக் கல்லுாரியாக உருவாகி, 1970ல், ஐந்தாண்டு டிப்ளமோ படிப்பு துவக்கப்பட்டது.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்டனர். டிப்ளமோ முடித்தவர்கள், பட்டம் படிக்க கருதி, 1976ல் மூன்றாண்டு பட்டப் படிப்பு துவக்கப்பட்டது. கடந்த 1991 முதல் கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்குகிறது.
முன்பு பி.எஸ்சி., என வழங்கப்பட்ட பட்டம், தற்போது பி.எப்.ஏ., என வழங்கப்படுகிறது.
நான்காண்டு பட்டப் படிப்புகள் மட்டுமே உண்டு.
இதற்கு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கல், சுதை, உலோகம், மரம் என, மரபு சிற்பக்கலைகள், மரபு கட்டடக்கலை, மரபு வண்ணம், ஓவியம் ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. டிப்ளமோ படிப்பின் போது, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், முந்தைய பட்டப் படிப்பின் போது, சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கீழ், தேர்வுகள் நடத்தப்பட்டன.
தற்போதைய பட்டப் படிப்பில், டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை, கவின்கலை பல்கலைக் கழகத்தின் கீழ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மாமல்லபுரம் அரசு கட்டடக்கலை, சிற்பக்கலை கல்லுாரியில் முதல்வர், விரிவுரையாளர், பயிற்றுநர், பிற ஊழியர்கள் என, மொத்தம் 66 பணியிடங்கள் உண்டு.
கடந்த 2015 முதல், முதல்வர் பணியிடமும் காலியாக உள்ளது. தகுதி, பணிமூப்பு அடிப்படையில், விரிவுரையாளர்களே பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படுகின்றனர்.
விரிவுரையாளர், பயிற்றுநர் என, பெரும்பாலானோர் பணி ஓய்வுபெற்று, 50க்கும் மேற்பட்ட பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.
பொறுப்பு முதல்வர் உள்ளிட்ட நான்கு விரிவுரையாளர்கள், இரண்டு பயிற்றுநர்கள் என, ஆறு பேர் மட்டுமே, தற்போது நிரந்தர பணியாளர்களாக உள்ளனர்.
மேலும் இரண்டு பேர், விரைவில் ஓய்வுபெற உள்ளனர். பகுதிநேர ஆசிரியர்கள் 10 பேர் உள்ளனர். பகுதிநேர ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பணி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதால், பலர் பணியிலிருந்து அவ்வப்போது விலகுகின்றனர்.
அனைத்து பிரிவுகளுக்கும் ஒருங்கிணைந்த துறைத் தலைவர் பணியிடம் முன்பு இருந்து நிலையில், நாளடைவில் கைவிடப்பட்டது. சமஸ்கிருதம், நுண்கலை வரலாறு, இந்திய தத்துவவியல் மற்றும் அழகியல், இசை, நடனம், கட்டட கலை, கணிதம், ஆட்டோகேட் பாடப்பிரிவுகளுக்கு விரிவுரையாளர்களே இல்லை.
நிர்வாக பணியாளர்கள், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோரும் இல்லை.
இத்துடன், 35 ஆண்டுகள் பழமையான இந்த கல்லுாரி கட்டடங்களின் சுவர், கூரை உள்ளிட்டவை சேதமடைந்து உள்ளன. மாணவர்கள் அமர மேஜை உள்ளிட்ட பொருட்கள் இல்லை. கைவினை பயிற்சிக்கேற்ப, பிரத்யேக வடிவ மேஜை, இருக்கைகளும் இல்லாததால், சாதாரண மேஜைகளே பயன்படுத்தப்படுகின்றன.
பொதுப்பாடம் பயில, 200 பேர் ஒருங்கிணைய பிரத்யேக அரங்கமும் இல்லை. வகுப்பறைக்காகவும், செய்முறை பயிற்சிக்கும் போதிய கட்டடமின்றி, இடநெருக்கடியில் தவிக்கின்றனர்.
இசை, நடனம் பிரிவுகளின் கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளன. நீண்ட காலம் பயனின்றி, இசைக் கருவிகளும் நாசமாகி உள்ளன. மரபு கட்டடக்கலை கணினி ஆய்வகமும் வீணாகியுள்ளது.
குடிநீர் தரமின்றி இருப்பதுடன், பற்றாக்குறையாகவும் உள்ளது. கழிப்பறைகள் குறைவாக உள்ளன. மாணவ விடுதியும் சீரழிந்து உள்ளது. கல்லுாரி வேன், பயன்படுத்தப்படாமலேயே சீரழிந்து விட்டது.
30 ஏக்கர் பரப்புள்ள கல்லுாரி வளாகம், அதற்கான அடையாளேமே இல்லாமல், புதராக மாறி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிகரித்துள்ளன.
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கடந்த 2020ல் இங்கு பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், எந்த மேம்பாடும் இல்லை.
ஒரே மரபுக்கலை கல்லுாரியாக இருந்தும், பெயரளவிற்கே இயங்குகிறது. அதன் முக்கியத்துவத்தை, அரசு ஒரு பொருட்டாக கருதாமல் அலட்சியப்படுத்துகிறது. எங்களுக்கு பாடம் நடத்த, விரிவுரையாளர்கள் இல்லை. தேர்வு நடக்கும் போது மட்டும், வெளியாட்களால் வகுப்பு நடத்தப்படுகிறது. இதனால், எங்கள் படிப்பு பாழாகிறது. கட்டடங்களும் சேதமடைந்து, மழைநீர் உள்ளே பெருக்கெடுக்கிறது. உயரதிகாரிகள் ஆய்வு செய்து, கல்லுாரியை மேம்படுத்த வேண்டும்.
- மாணவர்கள்,
மாமல்லபுரம் அரசு கட்டடக்கலை, சிற்பக்கலை கல்லுாரி
மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லுாரியில் உள்ள காலி பணியிடங்கள் அதிகம் தான். பணியிடங்களை நிரப்புவது, கல்லுாரியை மேம்படுத்துவது குறித்து, தமிழக அரசிடம் தெரிவித்து உள்ளோம். அது பற்றி, தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.
-- கல்லுாரி நிர்வாகம்.