/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுகாதார நிலைய புதிய கட்டடம் பயன்பாடின்றி வீணாகும் அவலம்
/
சுகாதார நிலைய புதிய கட்டடம் பயன்பாடின்றி வீணாகும் அவலம்
சுகாதார நிலைய புதிய கட்டடம் பயன்பாடின்றி வீணாகும் அவலம்
சுகாதார நிலைய புதிய கட்டடம் பயன்பாடின்றி வீணாகும் அவலம்
ADDED : பிப் 09, 2025 12:20 AM

அச்சிறுபாக்கம்,அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுபேர்பாண்டி ஊராட்சியில், புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் வீணாகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு 59 ஊராட்சிகள் உள்ளன.
அதில், 1.50 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
மக்கள் தொகையின் அடிப்படையில், அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் எல்.எண்டத்துார், ஒரத்தி, ராமாபுரம் ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கிராமப் பகுதிகளில் இருந்து அச்சிறுபாக்கத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் வருவதை தவிர்க்கும் வகையில், 2 முதல் 3 ஊராட்சிகளுக்கு ஒரு துணை சுகாதார நிலையம் என்ற விகிதத்தில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 59 ஊராட்சிகளில், 27 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தவிப்பு
அதில், 27 துணை சுகாதார நிலையங்களுக்கும், 20க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் பணியில் உள்ளனர்.
ஆனால் இவற்றில், சொந்த கட்டடமின்றி சில துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.
வெங்கடேசபுரம், வேடந்தாங்கல், பாப்பநல்லுார், தீட்டாளம், பெரும்பாக்கம் ஊராட்சிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன.
மற்ற, 22 துணை சுகாதார நிலையங்களும், ஊராட்சிகளில் உள்ள இ -- சேவை மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், நுாலக கட்டடம், மகளிர் குழு கட்டடம் மற்றும் தனியாருக்குச் சொந்தமான வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
சொந்த கட்டடம் இல்லாததால் போதிய இட வசதி, கழிப்பறை வசதி மற்றும் காற்றோட்டமின்றி, சுகாதார நிலைய ஊழியர்களும், பொதுமக்களும் தவிக்கின்றனர்.
இந்நிலையில், சிறுபேர்பாண்டி ஊராட்சியில், 15வது நிதி குழு மானியம் 2023 -- 24ல், சுகாதார மானியம் திட்டத்தின் கீழ், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், துணை சுகாதார நிலையத்திற்கு கட்டடம் கட்டப்பட்டது.
கட்டடம் கட்டப்பட்டு அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் பூட்டியே உள்ளது.
கோரிக்கை
இதனால், சிறுபேர் பாண்டி துணை சுகாதார நிலையம், தற்போது அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
கலெக்டர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், இந்த கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.