/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத ரேஷன் கடை
/
கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத ரேஷன் கடை
கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத ரேஷன் கடை
கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத ரேஷன் கடை
ADDED : நவ 06, 2024 08:10 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஜே.சி.கே., நகரில், ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. அதற்கு நிரந்தர கட்டடம் கட்டித்தரக் கோரி, நகரவாசிகள் ஆணையர் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2021 - 22ம் ஆண்டில், ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதன்பின், ரேஷன் கடை கட்ட, நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் முடிந்தும், கடந்த ஓராண்டாக, புதிய ரேஷன் கடை கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், கட்டடத்தின் முன்புறம் முட்புதர்கள் வளர்ந்து, விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனை தவிர்க்க, ரேஷன் கடைக்கு கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, நகரவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் ஆண்டவனிடம் கேட்டபோது, “ஜே.சி.கே., நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டடத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.