/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பராமரிப்பற்ற படாளம் 'பார்க்கிங்'கை புறக்கணிக்கும் லாரிகளால்... விபத்து அபாயம்:நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
பராமரிப்பற்ற படாளம் 'பார்க்கிங்'கை புறக்கணிக்கும் லாரிகளால்... விபத்து அபாயம்:நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சம்
பராமரிப்பற்ற படாளம் 'பார்க்கிங்'கை புறக்கணிக்கும் லாரிகளால்... விபத்து அபாயம்:நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சம்
பராமரிப்பற்ற படாளம் 'பார்க்கிங்'கை புறக்கணிக்கும் லாரிகளால்... விபத்து அபாயம்:நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : நவ 15, 2025 11:24 PM

மறைமலை நகர்: செங்கல்பட்டு அடுத்த படாளம் பகுதியில் உள்ள கனரக வாகனங்கள் 'பார்க்கிங்' பகுதியை முறையாக பராமரிக்காதது மற்றும் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், லாரி ஓட்டுநர்கள் அச்சமடைந்து, நெடுஞ்சாலை ஓரம் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், சக வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை தென் மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
இச்சாலை வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கனரக வாகனங்கள் ஏற்றிக் கொண்டு வருகின்றன.
வெளி மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பொருட்கள் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களும், இந்த சாலையில் அதிக அளவு சென்று வருகின்றன.
செங்கல்பட்டு அடுத்த அடுத்த படாளம் பகுதியில், நீண்ட துாரம் பயணம் மேற்கொள்ளும் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்கள் தங்கி ஓய்வெடுக்கும் வகையில், லாரி 'பார்க்கிங்' அமைந்துள்ளது.
அவதி இரு மார்க்கங்களிலும் உள்ள இந்த 'பார்க்கிங்'கில் 300 கனரக வாகனங்களை நிறுத்த முடியும்.
இந்த பார்க்கிங், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது அமைக்கப்பட்டது. துவக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட இந்த பார்க்கிங்கில், தற்போது போதிய அளவு குடிநீர் மற்றும் கழிப்பறை, மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், ஓட்டுநர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இங்கு தண்ணீர் இல்லாததால், சமையல் செய்வதற்கு தேவையான தண்ணீரைக் கூட, விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இரவு நேரங்களில், இந்த பார்க்கிங்கில் கொசு தொல்லை அதிகம் இருப்பதால், ஓய்வெடுக்க முடியவில்லை என்றும், நோய் தொற்று அபாயம் உள்ளதாகவும், லாரி ஓட்டுநர்கள் புலம்புகின்றனர்.
மேலும், இங்கு கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்களில், தற்போது பிளாஸ்டிக் குப்பை அடைத்துள்ளதால், தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதன் காரணமாக கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள், இந்த பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தாமல், ஜி.எஸ்.டி., சாலையில் பரனுார் சுங்கச்சாவடி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்களை நிறுத்துகின்றனர். சாலையோரத்தில் நிறுத்தப்படும் இந்த கனரக வாகனங்களால், அடிக்கடி விபத்துகள் நடைபெற்று, உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. எனவே, படாளம் பார்க்கிங் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென, லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருட்டு இது குறித்து லாரி ஓட்டுநர்கள் கூறியதாவது:
பார்க்கிங் பகுதியில் இரவு நேரங்களில் லாரியை நிறுத்தி விட்டு துாங்கும் போது மொபைல் போன் திருட்டு, வாகனங்களின் 'பேட்டரி' திருட்டு, டீசல் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இங்குள்ள கழிப்பறை பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீரமைப்பு பணிகளுக்காக, தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை தண்ணீர் வரவில்லை. இதுபோன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், சிரமப்பட வேண்டியுள்ளது.
இந்த அடிப்படை வசதிகளுக்கும் சேர்த்தே, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தி பல கி.மீ., துாரம் வாகனங்களை ஓட்டி வருகிறோம்.
ஆனால், சுங்கச்சாவடி நிர்வாகம் எந்த வசதியும் ஏற்படுத்தித் தருவதில்லை. சரக்கு வாகனங்கள் பஞ்சர், பழுதடைந்தால் கூட உதவ முன்வருவதில்லை. ஓய்வின்றி நீண்ட துாரம் வாகனங்களை இயக்குவதும், சில நேரங்களில் விபத்துக்கு காரணமாகி விடுகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, படாளம் பார்க்கிங்கில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது: ஜி.எஸ்.டி., சாலையின் ஓரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு அடுத்த பரனுார் -- அச்சரப்பாக்கம் ஆத்துார் சுங்கச்சாவடி வரை 30க்கும் மேற்பட்ட இடங்கள் விபத்து நடைபெறும் இடங்களாக கண்டறியபட்டு, எச்சரிக்கை விளக்குகள் அமைப்பது,கனரக வாகனங்களை நிறுத்துவோருக்கு அபராதம் விதிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜி.எஸ்.டி., சாலை துவக்கப்பட்ட காலத்தில், புறநகர் பகுதிகளில் குறைந்த அளவு தொழிற்சாலைகள் இருந்தன. கடந்த 20 ஆண்டுகளில் மகேந்திரா வேர்ல்டு சிட்டி, ஒரகடம் சிப்காட் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இங்கு வரும் வாகனங்களை நிறுத்த, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி புதிய 'பார்க்கிங்' அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.சரத்குமார், சிங்கபெருமாள் கோவில்.

