UPDATED : அக் 09, 2026 08:57 PM
ADDED : அக் 09, 2026 06:46 PM

மாமல்லபுரம்: தனியார் நிறுவனம் தயாரித்துள்ள இரண்டு ராக்கெட்டுகள், ஒரே நேரத்தில் இன்று காலை மாமல்லபுரம் அருகில் விண்ணில் ஏவப்படுகின்றன.
சென்னை அடுத்த, கேளம்பாக்கத்தில், ‘ஸ்பேஸ் சோன் இந்தியா’ என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு செயற்கோள்களை ஆய்வு செய்து, அவற்றை உருவாக்கி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய, 2023ம், மாணவ – மாணவியர் உருவாக்கிய, செயற்கைகோள் மாமல்லபுரம் பகுதியில் இருந்து விண்ணில் செலுத்தியது.
2024ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக, ஹைபிரிட் ராக்கெட்டை உருவாக்கி, திருவிடந்தை பகுதியில் இருந்து விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.
அதைத்தொடர்ந்து, மாணவ – மாணவியர் மற்றும் இளம் விஞ்ஞானிகளின் பங்களிப்புடன், ‘ரூமி ட்வின் மிஷன்’ என்ற ரூமி 1, ரூமி 2 ஆகிய இரண்டு ராக்கெட்டுகள் இந்தாண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.
ராக்கெட் ஏவும் செலவை குறைப்பது, எரிபொருள் பயன்பாடு, இன்ஜின் இயக்கத்தை நிறுத்தி, மீண்டும் இயக்குவது உள்ளிட்டவை குறித்து ஆராய்வதற்காக, இந்த ராக்கெட்டுகளை உருவாக்கியுள்ளதாக, நிறுவன தலைமை செயல் அலுவலர் ஆனந்த் மேகலிங்கம் தெரிவித்தார்.
இன்று காலை 6:30 – 7:00 மணிக்குள், மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி பகுதியில் இருந்து, ஒரே நேரத்தில் இரண்டு ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகின்றன. இந்நிகழ்வில் தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆறுமுகம் நமசிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
