/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவருக்கு கத்தி வெட்டு வாலிபர்கள் இருவர் கைது
/
மாணவருக்கு கத்தி வெட்டு வாலிபர்கள் இருவர் கைது
ADDED : நவ 11, 2024 11:59 PM
திருப்போரூர் : காரைக்குடியை சேர்ந்தவர் அபினேஷ், 19. இவர், திருப்போரூர் அடுத்த படூர் தனியார் கல்லுாரியில், பி.டெக்., மெக்கட்ரானிக்ஸ் முதலாம் ஆண்டு படிக்கிறார். அதே பகுதி தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, நாவலுார் தனியார் மாலுக்கு சென்று, தங்கியுள்ள விடுதிக்கு திரும்பினார். அப்போது, கேட் மூடியிருந்ததால், திறக்கும் வரை காத்திருந்துள்ளார்.
அந்நேரத்தில், அங்கு பைக்கில் வந்த இரு வாலிபர்கள், மது போதையில் கத்தியை காட்டி, அபினேஷிடம் பணம், மொபைல் போன் கேட்டு மிரட்டினர்.
தன்னிடம் ஏதும் இல்லை என கூறிய அபினேஷை, அந்த வாலிபர்கள் கத்தியால் தலை மற்றும் கைகளில் வெட்டினர். படுகாயத்துடன் கூச்சலிட்டதால், அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பினர்.
அருகே இருந்தவர்கள் அபினேஷை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனை நிர்வாகம், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.
உடனே, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். அதில், இளவந்தாங்கல் பகுதியை சேர்ந்த அஸ்வின், 19, கேளம்பாக்கத்தை சேர்ந்த ஷாகுல் ஹமீது, 23, ஆகியோர் மாணவரை தாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.