/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் சித்தேரியில் கலப்பு ஆனைக்குன்னத்தில்ல் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு
/
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் சித்தேரியில் கலப்பு ஆனைக்குன்னத்தில்ல் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் சித்தேரியில் கலப்பு ஆனைக்குன்னத்தில்ல் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் சித்தேரியில் கலப்பு ஆனைக்குன்னத்தில்ல் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு
ADDED : நவ 24, 2024 12:48 AM

செங்கல்பட்டு:உள்ளாட்சிகள் தினமான கடந்த நவம்பர் 1ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்., 31ம் தேதி தீபாவளி விடுமுறையை தொடர்ந்து, மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில், சிறப்பு கிராம சபைக் கூட்டம், 359 ஊராட்சிகளில் நடந்தது.
இந்த கூட்டத்தில், வடகிழக்கு பருவ மழையையொட்டி, தாழ்வான மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, மழைநீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
புயல் பாதுகாப்பு மையங்களில், குடிநீர், மின்விளக்கு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பருவ மழை துவங்குவதற்கு முன்பே, கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சீரமைக்க வேண்டும்
தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைககள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏரிகள், பாசன ஏரிகள், குளம், குட்டைகள் ஆகிய பகுதியில், கரைகளை கண்காணிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் மூலம் அவ்வப்போது தரப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டும். பயிற்சி பெற்ற கிராம மகளிர் சுய உதவி குழு பெண்களை கொண்டு, ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டுள்ள கள ஆய்வு கருவிகளை பயன்படுத்தி, 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்து, பதிவேட்டில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.
செய்யூர்
செய்யூர் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் தெருவிளக்கு, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், செய்யூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என. தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுராந்தகம் ஒன்றியம், தொன்னாடு ஊராட்சியில், சில வாரங்களாக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை.
இதை கண்டித்து, அப்பகுதிவாசிகள் 50க்கும் மேற்பட்டோர், கூட்டத்தில் பங்கேற்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, 29ம் தேதி வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என, உறுதி அளித்தன்படி, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
திருப்போரூர்
திருப்போரூர் ஒன்றியத்தில், கேளம்பாக்கம், புதுப்பாக்கம், படூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில், அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமை வகித்தனர்.
கூடுவாஞ்சேரி
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, வண்டலூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், காரணைப் புதுச்சேரி உள்ளிட்ட, பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில், அந்தந்த ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பெரும்பாலான ஊராட்சிகளில், சாலை, குடிநீர், தெருவிளக்கு, குப்பையை உடனுக்குடன் அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.
சதுரங்கப்பட்டினம்
கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம், தலைவர் ரேவதி தலைமையில் நடந்தது.
இதில், கல்பாக்கம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், வீடுதோறும் சுத்திகரிப்பு குடிநீர் சாதனம் வழங்கும் திட்டத்தை, இந்த ஊராட்சியிலும் செயல்படுத்தி, அதை வழங்க வேண்டுமென, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், சதுரங்கப்பட்டினம் - திருத்தணி சாலையில், கொத்திமங்கலம் சந்திப்பு அருகே உள்ள தனியார் மதுக்கூடம் உள்ளது.
இங்கு வருவோர் தினமும் தகராறு, மோதல் ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
தனியார் மதுக்கூடத்தை அகற்ற வலியுறுத்தி, முந்தைய கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றிய நிலையில், நேற்று மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அச்சிறுபாக்கம்
அச்சிறுபாக்கம் ஒன்றியம் ஆனைக்குன்னம் ஊராட்சியில், நேற்று 11:00 மணியளவில் துவக்க வேண்டிய கிராம சபை கூட்டம், மதியம் 1:00 மணிக்கு, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளின் அழுத்தத்தால், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே நடந்தது. இதில், 10க்கும் குறைவான மட்டுமே பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், வார்டு உறுப்பினர்கள், துப்புறவு பணியாளர் என, பொதுமக்கள் இன்றி, குறைவான நபர்களுடன், கூட்டம் அவசர அவசரமாக நடந்து முடிந்தது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
ஆனைக்குன்னம் ஊராட்சிக்கு உட்பட்டு சித்தேரி உள்ளது. இந்த சித்தேரியில், நச்சுத்தன்மை உடைய கடப்பை மரம் அதிக அளவில் உள்ளன.
மேலும், இப்பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் இருந்து, மழைக் காலங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் சித்தேரியில் கலக்கிறது. இதனால், ஏரி நீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இந்த சித்தேரியில் இருந்து, இருளர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக, குடிநீர் கிணறு அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
குடிநீர் கிணற்றை மாற்று இடத்தில் அமைக்கக்கோரி, அக்., 2ல் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சித்தேரியில் குடிநீர் வெட்டும் பணியை துவக்கி உள்ளனர்.
மாற்று இடத்தில் அமைக்கக்கோரி, கலெக்டர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குடிநீர் கிணற்றை மாற்று இடத்தில் அமைக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.