/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளில் மூழ்கிய பாலம் வாயலூர் வாசிகள் அச்சம்
/
இருளில் மூழ்கிய பாலம் வாயலூர் வாசிகள் அச்சம்
ADDED : அக் 12, 2024 11:02 PM

கூவத்துார்:கூவத்துார் அடுத்த வாயலுார் கிராமத்தில் உள்ள இ.சி.ஆர்., சாலையில், பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் பாலம் உள்ளது. இதன் வழியாக இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரி என, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த 2016ம் ஆண்டு 90 கோடி ரூபாய் மதிப்பில், 1,076 மீ., நீளம், 19 மீ., அகலத்தில் நான்குவழி பாதை பாலம் அமைக்கப்பட்டது.
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்க பாலாற்று பாலத்தின் இருபுறமும், 200க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைத்து இரவில் மின்னொளியில் ஜொலித்தது.
ஆனால், முறையான பராமரிப்பு இல்லாமல் காலப்போக்கில் மின் விளக்குகள் பழுதடைந்தன. இந்த மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால், தற்போது பல மின் விளக்குகள் எரியாமல், போதிய வெளிச்சமின்றி பாலம் இருளில் மூழ்கி காணப்படுகிறது.
இதன் காரணமாக, இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இருள் காரணமாக விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திருட்டு சம்பவங்கள் நடப்பதற்கும் வழிவகுக்கும்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள அனைத்து மின்விளக்குகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.